அமலாக்க துறையை எதிர்த்துப் போராடி வரும் செந்தில் பாலாஜியின் சகோதரர்! விசாரணையை தள்ளி வைத்த உயர்நீதிமன்றம்!

By :  G Pradeep
Update: 2025-11-26 11:34 GMT

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை அவர்கள் மீது சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீசை அமலாக்கத்துறை அனுப்பிய நிலையில் அதை திரும்ப பெற கோரி அசோக் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். 

இதை விசாரித்த நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி. அருள் முருகன் முன்னிலையில் அசோக் குமார் தரப்பில், விசாரணையின் ஆரம்ப காலகட்டத்தில் அமலாக்கத்துறையால் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகும் திரும்ப பெறாமல் இருப்பதில் எந்தவித பயனும் இல்லை என்று கூறப்பட்டது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில் லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெற வேண்டி கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் எதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காகவும், ஒன்பது முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்ததாக பதில் அளிக்கப்பட்டது. பிறகு நீதிபதிகள் இன்னும் லுக் அவுட் நோட்டீஸ் நீடிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய நிலையில் அமலாக்கத்துறை அசோக் குமாரின் மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை மூன்று வாரம் தள்ளி வைத்துள்ளது.

Tags:    

Similar News