சென்னை குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் போராட்டம்!!
கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதி மக்கள் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டம் நடத்தினர். "தமிழ்நாடு அரசே திமுக அரசே எங்கள் ஓட்டு இனிக்குதா? எங்களின் நலன்கள் கசக்குதா?" எனக் கோஷமிட்ட மக்கள் மேடையேறி தங்களின் பிரச்னைகளை அடுக்கினர்.
மேலும் 5 நாட்களாக கரண்ட் இல்லை எனவும், தண்ணீர் தேங்கியிருப்பதால் எலக்ட்ரிசன் கூட வயரில் கை வைக்க பயப்படுகிறார்கள் என்றும், மழையால் சுவர் அப்படியே ஊறிப் போய்விடுகிறது என கூறினர். தங்களை அப்படியே குப்பை மாதிரி எழில் நகரில் தூக்கி வீசிவிட்டார்கள் என்றும், ஓட்டு கேட்டு வரும்போது மட்டும் நாலு மாடி ஏறி வருகிறார்கள் அதன் பிறகு கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இங்கு இருப்பவர்களுக்கு பாதுகாப்பே இல்லை என்றும், சிறுவர்கள் போதைக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என வேதனை தெரிவித்தனர்.
சென்னைக்குள் இருக்கும் குடியிருப்புகளில் 50,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் மக்களின் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கேள்விக்குறியாக இருக்கிறது. தமிழக அரசு மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் இருக்கிறார்கள் என ஜெயராமன் தெரிவித்தார்.