தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்!! அமைச்சர் நேருவின் அலட்சியம்!!
By : G Pradeep
Update: 2026-01-04 13:29 GMT
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர். ஆனால், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு.
1900க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரிப்பன் பில்டிங் முன்பு அமர்ந்து போராடத் தொடங்கினர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறை அவர்களை குண்டுக்கட்டாகக் கைது செய்தது. அதன்பிறகும் தூய்மைப் பணியாளர்கள் பின்வாங்கவில்லை.
சென்னை மாநகர் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி கைதாகினர். அண்ணா அறிவாலயம், மெரினா, மாநகராட்சி ஆணையர் வீடு என முற்றுகையிட்டனர். அம்பத்தூரில் 50 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். இன்று சுடுகாட்டில் குடியேறி போராடினர்.
அமைச்சர் நேரு ஒரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கே வரவில்லை. 2 நிமிடங்களில் சந்தித்துவிட்டு அனுப்பிவிட்டார். கோரிக்கை மனுவை வாங்கிக்கொள்ளவில்லை. போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கின்றனர்.
"நாங்கள் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இல்லை. எங்கள் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவே போராடுகிறோம். பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறோம்" என்கிறார் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி.