காங்கிரஸ்-திமுக கூட்டணி!! பேச்சுவார்த்தை நடந்து வருகிறது - செல்வப்பெருந்தகை!!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ்-திமுக கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என காங்கிரஸ் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாத நிலையில், அதன் கூட்டணியில் சேர விரும்பாதவர்களை ஐடி, ஈடி, சிபிஐ ஆகியவற்றை பயன்படுத்தி, அச்சுறுத்தி கூட்டணியில் சேர மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ப்பந்தம் செய்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய விவகாரம் குறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்துக் கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அகில இந்திய அளவில் ராகுல் காந்தி, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை எதிர்த்து மக்களவையில் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக தமிழகம், புதுச்சேரி உட்பட திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 40 மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களும் ராகுல் காந்தியின் பின்னால் நாடாளுமன்றத்தில் இண்டியா கூட்டணி சார்பாக வகுப்புவாத பாஜக-வை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.