சென்னை மாநகராட்சியில் தனியார்மயமாக்கலை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிய தூய்மைப் பணியாளர்களிடம், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என காவல்துறை கூறியுள்ளது.
1900க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கடந்த 150 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். துறை சார்ந்த அமைச்சர் நேரு மற்றும் அதிகாரிகள் யாருமே பேச்சுவார்த்தை நடத்தாததால் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையின் மண்டலங்கள் 5 மற்றும் 6 இல் குப்பை பேணும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. இதை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
13 நாளா ரிப்பன் பில்டிங் முன்னாடி உட்காந்திருந்தோம். எந்த மக்களுக்காவது நாங்க தொந்தரவு கொடுத்தோமா? இப்போ போராட அனுமதி கேட்ட எதோ சமூக விரோதிங்க மாதிரி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்னு சொல்றாங்க. இதெல்லாம் நியாயமா என்று தூய்மைப் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.