மோடி ஆட்சியில் 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்த நாட்டின் பட்ஜெட் மதிப்பு!
பத்து ஆண்டுகளில் நாட்டின் பட்ஜெட் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தொழில் துறை மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் டெல்லியில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய பயணம் மத்திய பட்ஜெட் 2024 - 25 என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. தொழில்துறை அரசு தூதரக அதிகாரிகள் சிந்தனையாளர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். மாநாட்டில் அவர் பேசியதாவது :-
கடந்த 2014 இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டின் மதிப்பு ரூபாய் 16 லட்சம் கோடி. பத்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நாங்கள் முன்வைத்த மத்திய பட்ஜெட் 2024 -ன் மதிப்பு 48 லட்சம் கோடி. அதாவது எனது ஆட்சியில் நாட்டின் பட்ஜெட்டின் மதிப்பு மூன்று மடங்கு உயர்ந்து 48 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மூலதனச் செலவு என்பது வளர்ச்சிக்கான மிக முக்கிய முதலீடு ஆகும்.
2004 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டில் மூலதனச் செலவு சுமார் 90,000 கோடியாக இருந்தது. பின்னர் அது ரூபாய் 2 லட்சம் கோடியாக அதிகரித்தது. ஆனால் இன்று மூலதனச் செலவு ரூபாய் 11 லட்சம் கோடிக்கும் அதிகம் .2014-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் லட்சக்கணக்கான கோடி ஊழல்களால் தடம் புரண்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை எங்களின் மிகப்பெரிய சவாலாக இருந்தது .இன்று இந்தியாவை மீட்டுப் பாதையில் கொண்டு வந்து விட்டோம் என்று பெருமிதம் கொள்கிறோம் .
2014-ல் 50 கோடி வருமானம் ஈட்டும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 30 சதவீத வரி செலுத்த வேண்டிய நிலையில் இருந்தன. இன்று அந்த வரி 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. விரைவில் அது மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவிற்கு வர ஆர்வமாக உள்ளனர். உலகத் தலைவர்கள் இந்தியா மீது நேர்மறை எண்ணம் கொண்டுள்ளனர். இந்திய தொழில் துறைக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. இந்த வாய்ப்பை நாம் இழக்கக்கூடாது .இவ்வாறு மோடி பேசினார்.
SOURCE :NEWS