"இந்தியப் பெருங்கடலில் உள்ள புவிசார் உத்தி நிலையின் காரணமாக, பிராந்தியத்தில் அமைதியான சகவாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கு உள்நாட்டுத் திறன் இன்றியமையாததாக இருப்பதால், இந்தியா ஒரு முக்கிய பங்கை வகிக்கத் தயாராக உள்ளது" என்று மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் சேத், பெங்களூருவில் நடைபெறும் 2025 ஏரோ இந்தியாவில் இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கூறினார். ‘தன்னிறைவு இந்திய கடற்படை விமானப் போக்குவரத்து – 2047 மற்றும் அதனுடன் இணைந்த சூழலியல்’ என்ற கருப்பொருளுடன், ‘இந்திய கடற்படை விமானப் போக்குவரத்து-தொழில்நுட்ப செயல்திட்டம் 2047’ என்ற தொலைநோக்கு ஆவணத்தை , கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே திரிபாதியுடன் இணைந்து அமைச்சர் வெளியிட்டார்.
வலுவான மற்றும் துடிப்பான தேசத்திற்கு வலுவான தொழில்துறை அடித்தளத்தின் ஆதரவுடன் கூடிய நம்பகமான பாதுகாப்புப் படை முக்கியமானது என்பதை சமீபத்திய உலக மோதல்கள் நிரூபித்துள்ளன என்று திரு சஞ்சய் சேத் கூறினார். ஆக்கப்பூர்வமான மற்றும் கூட்டு அணுகுமுறையின் மூலம் சிக்கலான பிரச்சினைகளுக்கு புதுமையான, உள்நாட்டில் கண்டறியப்பட்ட மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்கான முயற்சிகளில் அனைத்து பங்குதாரர்களும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வெளியிடப்பட்டுள்ள தொழில்நுட்ப செயல்திட்டம் வெறும் புத்தகம் மட்டுமல்ல, பிரதமர் திரு. நரேந்திர மோடியால் வகுக்கப்பட்ட 'தற்சார்பு இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான நம்பகமான ஆவணம் என்றும் பாதுகாப்பு இணையமைச்சர் குறிப்பிட்டார். உள்நாட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்துறை பங்குதாரர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், புத்தொழில் நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இந்த ஆவணம் செயல்படும். அமைப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் வரிசைப்படுத்தல் ஆகியவற்றில் காலக்கெடுவைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.