ஜூலை மாதம் பதவியிலிருந்து விலகிய பின்பு, விண்வெளிக்கு பறக்க உள்ளார் : அமேசான் CEO.!
அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் நிர்வாகியாக இருக்கிற ஜெப் பெசோஸ் தற்போது தன்னுடைய நீண்டகால கனவை நிறைவேற்ற உள்ளார். இது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் 1994 அமேசான் நிறுவனத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து வழி நடத்தி வந்தார். இதன் காரணமாக உலக பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சிறுவயதில் விண்வெளி பயணம் செய்வதின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 2000 ஆம் ஆண்டு 'ப்ளு ஆர்ஜின்' என்னும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் துவக்கினார்.
2015 ஆம் ஆண்டு ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் 'நியூ ஷெப்பர்ட்' என்ற ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்வெளிக்கு செலுத்தியது. 2021 ஜூலை முதல் வாரம் அமேசான் CEO பொறுப்பிலிருந்து ஜெப் பெசோஸ் விலகப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் அவர் தெரிவித்திருந்தார் எனவே அவருடைய பதவி விலகலுக்கு பின் அவர் தன்னுடைய நீண்டகால கனவை நினைவாக்க உள்ளார். வரும் ஜூலை 20ம் தேதி புளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட் மூலம், விண்வெளிக்கு பறக்க திட்டமிட்டுள்ளதாக ஜெப் பெசோஸ் தற்பொழுது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் கூறுகையில், "ப்ளு ஆர்ஜின் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு சோதனைக்காக மனிதர்களை ராக்கெட்டில் அனுப்ப திட்டமிட்டது. இதையடுத்து வரும் ஜூலை 20ம் தேதி எனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு பறக்க உள்ளேன். இதன் மூலம் விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு நிறைவேற போகிறது" என்று தெரிவித்துள்ளார்.