நட்சத்திர ஓட்டல்களுக்கு 10 வித கட்டளைகள்! தரத்தை உறுதி செய்ய தமிழக அரசு போடும் கடிவாளம்!

நட்சத்திர ஓட்டல்களுக்கு 10 வித கட்டளைகள்! தரத்தை உறுதி செய்ய தமிழக அரசு போடும் கடிவாளம்!

Update: 2019-06-26 12:01 GMT

உணவுகள் தரமாக சமைக்கப்படுகின்றதா ? என்பதை அறிந்து கொள்ள நட்சத்திர ஓட்டல்களின் சமையலறைக்குள் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசின் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணயக்குழுவால் உணவகங்களுக்கு தர வரிசை நிர்ணயிப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், சென்னை எழும்பூரில் ரமடா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.


கூட்டத்தில் முதல் கட்டமாக சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களின் சார்பில் அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், நட்சத்திர ஓட்டல்கள் 10 கட்டளைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.


அதன்படி நட்சத்திர ஓட்டல்களில் உணவகம் நடத்த உணவு பாதுகாப்பு உரிமம் பெறிருக்க வெண்டும். ஓட்டலில் வாடிக்கையாளரின் கண்ணில் படுமாறு, உணவு பாதுகாப்பு குறித்த பதாகைகளை வைத்திருக்க வேண்டும்.


உணவகத்தின் சமையல் அறையில் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் புகார்களை சரி செய்யும் வகையிலான நபரை பணியில் அமர்த்த வேண்டும்.


தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை போதிய இடைவெளியில் ஆய்வக பரிசோதனை செய்து அறிக்கை வைத்திருக்க வேண்டும். முறையாக பயிற்சி பெற்ற உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள் பணியில் அமர்த்த வேண்டும்.


தேவையான உணவை மட்டும் தயார் செய்து, உணவு வீணாவதை தவிர்க்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவை பறிமாற வேண்டும். உணவு பொருளை கையாளுபவர்களுக்கு, பாதுகாப்பான முறையில் உணவை கையாளும் பயிற்சி அளித்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க வேண்டும்.


இப்படி 10 வகையான வழிமுறைகளை நட்சத்திர ஹோட்டல்கள் கையாளும் பட்சத்தில், ஆய்வுக்குப்பின் அந்த ஹோட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் 5 ஸ்டாருக்கு இணையான 5 ஸ்மைல் சான்றிதழ் வழங்கப்படும்.


ஐந்து மற்றும் நான்கு ஸ்மைல்-க்கு குறைவாக பெற்றிருக்கும் ஹோட்டல்களுக்கு, உணவு பாதுகாப்பு மேம்படுத்தும் சட்டம் 32 படி நோட்டீஸ் வழங்கப்படும். மேலும் உணவு பாதுகாப்புத்துறையின் அமலாக்கத்துறையின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் மிச்சமாகும் உணவை தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிட வேண்டும்.


பொதுமக்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் 90877 90877 என்ற எண்ணிலோ, 94440 42322 என்ற உணவு பாதுகாப்புத்துறையின் வாட்ஸ் ஆப் எண்ணிலோ தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்


மேலும் www.fssai.gov.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி ஹோட்டல் உரிமையாளர்கள் உரிமத்தை பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Similar News