
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், ஆதார் இணைப்பு என்பது பணம் செலுத்தும் ஒரு முறை மட்டுமே ஆகும். மேலும் ஆதார் அடிப்படையிலான பணம் செலுத்தும் முறையுடன் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்படாத காரணத்தால் வேலைவாய்ப்புக்கான கோரிக்கையை மறுக்க இயலாது. இதன் செயல்பாடுகளை மத்திய அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தைப் பெறுவதில் எதிர்கொள்ளும் எந்தவொரு சவால்களுக்கும் தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தவொரு தகுதியான பயனாளியும் அவர்களின் நியாயமான ஊதியத்தை பெறுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது. மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அல்லது வேறு ஏதேனும் அமைப்புகளால் சுட்டிக்காட்டப்படும் சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது ஊதியத்துடன் கூடிய தேவை அடிப்படையிலான வேலைவாய்ப்பு திட்டமாகும். கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்து கொண்டு, உள்ளாட்சி அமைப்புகள் உட்பட பல்வேறு நிலைகளில் வேலை வாய்ப்புகளை அணுக வகை செய்கிறது. விருப்பமுள்ள தொழிலாளர்களை சேர்ப்பதற்கு ஏதுவாக மாதந்தோறும் ஒரு முறையாவது வேலை வாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்ய கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.