உணவு பதப்படுத்துதல் துறைக்கு 15,000 கோடி வட்டி மானியம்.! 35 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என கணிப்பு.!

உணவு பதப்படுத்துதல் துறைக்கு 15,000 கோடி வட்டி மானியம்.! 35 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என கணிப்பு.!

Update: 2020-06-25 12:05 GMT

கொரோனா தொற்று பரவல் மற்றும் அதைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் முக்கிய அம்சமாக ₹ 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பால், கோழி இறைச்சி மற்றும் பிற மாமிச உணவு பதப்படுத்தும் துறையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 3% வட்டி மானியம் அளிக்கும் திட்டத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இதைப்பற்றி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"பால் உற்பத்தியை அதிகரிக்கவும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த துறையில் உள்ள‌ அனைத்து நிறுவனங்களுக்கும் உதவும் வகையில் ₹ 15,000 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்க கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது" என்று தகவல் மற்றும் ‌ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார். மேலும், இதனால் 35 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கால்நடை வளர்ப்பு துறை அமைச்சர் கிரிராஜ் சிங், இந்த புதிய நிதி ஒதுக்கீடு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வண்ணம் அறிவிக்கப்பட்ட ₹ 20 லட்சம் கோடி பொருளாதார சீரமைப்பு நிதியின் ஒரு பகுதி என்று தெரிவித்தார். மேலும் "உணவு பதப்படுத்தும் துறையில் உட்கட்டமைப்பை ஏற்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு முதல் முறையாக 3% வட்டி மானியம் வழங்கப்படுகிறது" என்றும் குறிப்பிட்டார்.

Similar News