மதப் பாகுபாடு அரசியல் செய்ய மாட்டேன் - பிரதமர் மோடி!
இந்து - முஸ்லிம் பாகுபாடு அரசியல் செய்ய மாட்டேன். அப்படி அரசியல் செய்யும் நாளில் நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்களை தாக்கி பேசுவதாக பிரதமர் மோடி மீது எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. முஸ்லிம்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதாகவும் அவர்களுக்கு சொத்துகளை பகிர்ந்து அளிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிடுவதாகவும் அவர் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். வாரணாசி தொகுதியில் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது ஒரு செய்தி சேனலுக்கு அவர் பேட்டி அளித்தார் .அப்போது முஸ்லிம்கள் தொடர்பாக தன்மீது கூறப்படும் குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு அவர் கூறியதாவது:-
அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் பற்றி நான் பேசியதை முஸ்லிம்கள் பற்றி பேசியதாக சிலர் நினைத்துக் கொண்டனர். அதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன் .நான் இந்துக்கள் என்றோ முஸ்லிம்கள் என்றோ பெயர் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. ஏழை இந்துக்களிலும் அதிக பிள்ளைகளை பெற்றுக் கொள்ளும் பிரச்சனை இருக்கிறது. அவர்களால் தங்கள் பிள்ளைகளுக்கு முறையான கல்வி அளிக்கவே முடியாது .ஆகவே உங்களால் எத்தனை குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியுமா அத்தனை குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள் .'அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது தான் எனது தாரக மந்திரம்'.
நான் ஓட்டு வங்கி அரசியல் செய்வது இல்லை. தவறு என்றால் தவறு என்று சொல்லி விடுவேன் .நான் இந்து முஸ்லிம் பாகுபாடு அரசியல் செய்ய மாட்டேன். இது எனது உறுதிப்பாடு. இந்து முஸ்லிம் பாகுபாடு அரசியல் செய்தேன் என்றால் அந்த நாளிலிருந்து நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவன் ஆகிவிடுவேன் .ஒரு கிராமத்தில் 200 வீடுகள் இருக்கின்றன என்றால் அங்கு சாதி மத வேறுபாடின்றி வீடு ஒதுக்கப்பட வேண்டும் .
200 வீடுகள் இருக்கும் கிராமத்தில் 60 லட்சம் இந்தியர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம் .அப்போது அரசு கொடுப்பது 60 லட்சம் பேருக்கும் கிடைக்க வேண்டும் .இதுதான் சமூக நீதி. இதுதான் உண்மையான மதச் சார்பின்மை .அங்கு ஊழலுக்கும் இடம் இருக்காது .முஸ்லிம்கள் எனக்கு ஓட்டு போடுவார்களா என்று கேட்கிறீர்கள். இந்த நாட்டு மக்கள் எனக்கு ஓட்டு போடுவார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI