இந்தோ - சீன எல்லை கிராமங்களில் முடுக்கப்படும் வளர்ச்சிப் பணிகள்.!

இந்தோ - சீன எல்லை கிராமங்களில் முடுக்கப்படும் வளர்ச்சிப் பணிகள்.!

Update: 2020-07-03 04:18 GMT

லடாக்கில் உள்ள இந்திய - சீன எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வரும்‌ நிலையில், சீன நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தடை‌ செய்வது, போர்த் தளவாடங்களை கொள்முதல் செய்வது, போர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் படைகளை நிலை நிறுத்துவது என பாதுகாப்பை உறுதி செய்யும் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது.

இந்த வரிசையில் நீண்டகால பாதுகாப்பு திட்டமாக இந்திய-சீன எல்லையில் இருக்கும் கிராமங்களில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ₹ 190 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020-21 நிதியாண்டில் மொத்தமாக எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளுக்காக ₹ 783.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ-திபெத்திய எல்லைப் படை(ITBP) மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை(BSF) ஆகிய அமைப்புகள் தெரிவு செய்த கிராமங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டூள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் ₹ 190 கோடி இந்தோ-சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கும் எஞ்சிய நிதி பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுடனான எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-20 நிதியாண்டில் எல்லைப் பகுதி வளர்ச்சிப் பணிகளுக்காக ₹ 824.94 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எல்லைக் கோட்டை ஒட்டியுள்ள கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிப்பதன்‌ மூலம் அப்பகுதியின் மீது அரசு அக்கறை கொண்டுள்ளது என்று காட்டுவதோடு மக்கள் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் குடியிருப்பதையும் உறுதி செய்ய முடியும். இது எல்லைப் பகுதிக்கு பாதுகாப்பாக அமையும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தோ-சீன எல்லைப் பகுதி லடாக்கில் தொடங்கி ஹிமாச்சல பிரதேசம், உத்திரகண்ட், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் வரை 3488கிமீ தூரம் நீள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News