காங்கிரஸ் பிரமுகரிடம் 17 துப்பாக்கி குண்டுகள் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.!

காங்கிரஸ் பிரமுகரிடம் 17 துப்பாக்கி குண்டுகள் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.!

Update: 2020-11-11 16:34 GMT
சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் பயணிக்கும் முன் சோதனை செய்யப்பட்ட போது காங்கிரஸ் பிரமுகர் மயூரா ஜெயக்குமாரின் பையில் 17 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் செயற்குழு தலைவராக இருப்பவர் மயூரா ஜெயக்குமார். 

தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்ததை ஒட்டி அவரது கூட்டங்களில் பங்கேற்க ஜெயக்குமார் கோவையில் இருந்து சென்னை வந்ததாக கூறப்படுகிறது. நேற்று கூட்டம் முடிந்த நிலையில் இன்று காலை 5.45 மணி வாக்கில் வீடு திரும்புவதற்காக கோயம்புத்தூர் செல்லும் விமானத்தில் பயணிக்க சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

 விமானத்தில் ஏறும் முன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரது உடைமைகளை சோதித்த போது அவரது பையில் 17 துப்பாக்கி குண்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவர் பயணம் செய்ய‌ தடை விதிக்கப்பட்டு சென்னை விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் எதற்காக அத்தனை துப்பாக்கி குண்டுகளை எடுத்துச் செல்ல முயன்றார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்திருக்கின்றனர்.

விசாரணையின் போது தன்னிடம் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் இருப்பதாகவும் தவறுதலாக குண்டுகள் உள்ள பையை மாற்றி எடுத்து வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது துப்பாக்கி உரிமம், குண்டுகள் வாங்கும் போது வழங்கப்பட்ட எண்கள் உடைய ரசீது உள்ளிட்டவற்றை கோவையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஃபேக்ஸ் அனுப்புமாறு காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

அவ்வாறே ஜெயக்குமாரின் குடும்பத்தார் ஆவணங்களை அனுப்பிய பின் இனிமேல் இது போல் கவனக் குறைவாக இருக்கக் கூடாது என்று எச்சரித்து அப்படியே எழுதிக் கொடுத்து விட்டு செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

வீட்டில் இருந்தே பையை மாற்றி எடுத்து வந்திருந்தால் கோவையில் இருந்து சென்னை வரும் போது செய்யப்பட்ட பாதுகாப்பு சோதனையில் குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்குமே. இதில் எங்கே தவறு நடந்திருக்கும் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதம் நடக்கிறது.

Similar News