கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வள துறைகளுக்கு ₹21.27 கோடியில் புதிய திட்டங்கள்

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வள துறைகளுக்கு ₹21.27 கோடியில் புதிய திட்டங்கள்

Update: 2019-02-20 17:38 GMT

தமிழ்நாடு மீனவர்கள் பாக் வளைகுடாவில் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் போது, இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு ஆளாவதால், மீனவர்களது இழுவலைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிக்கும் தொழில் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகிறது.


எனவே, பாக் வளைகுடா பகுதியிலுள்ள இழுவலைப்படகுகளுக்கு மாற்றாக, மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் புதிதாக ஆழ்கடல் தூண்டில் மற்றும் செவுள்வலை சூரை மீன்பிடிப்பு படகுகளை வழங்கி, அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்திடும் வகையில், பாக் வளைகுடா பகுதி மீனவர்களின் இழுவலைப் படகுகளை மாற்றி ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக பரவலாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, பாக் வளைகுடா பகுதி மீனவர்களுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் 56 லட்சம் ரூபாய் மானியமாகவும், 16 லட்சம் ரூபாய் வங்கி கடனுதவியாகவும், 8 லட்சம் ரூபாய் பயனாளிகளின் முதலீடாகவும், மொத்தம் 80 லட்சம் ரூபாய் செலவில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டி வழங்கிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.


இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக, கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தால் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 4 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை இராமநாதபுரம் மாவட்ட மீனவப் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், சென்னை, சேத்துப்பட்டு பொழுதுபோக்கு மீன்பிடிப்பு மற்றும் பசுமை பூங்கா வளாகத்தில், 6 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 20 இருக்கைகள் கொண்ட குளிர்சாதன வசதிகளுடன் கூடிய மெய்நிகர் காட்சியக அரங்கம், தொடுதிரை கணினி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன் காட்சியகத்துடன் கூடிய மெய்நிகர் காட்சியகம். தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மாதவரம் வளாகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வண்ணமீன் வானவில் விற்பனை வளாகம்.திருவண்ணாமலை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் 1 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு கட்டடம்; வேலூர் மாவட்டம் – காட்பாடியில் 52 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனைக் கட்டடம்,


தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் 3 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க துறை மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள சி.டி. ஸ்கேன் கருவிகள், பால்வளத்துறை சார்பில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் 21 கோடியே 27 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார்.



Similar News