யானைகளின் பெயரைக் கூறி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் வனத்துறை - தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்!
யானைகளின் பெயரைக் கூறி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வனத்துறை அழிக்க முயற்சிப்பதாக தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு தொண்டாமுத்தூர் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். புதிய யானை வழித்தட பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டாமுத்தூர் விவசாயிகள் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த விவசாயிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக வனத் துறை தமிழ்நாட்டில் புதிதாக 42 யானை வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக ஒரு செய்தி சில தினங்களுக்கு முன்பு செய்திதாள்களில் வெளியாகி இருந்தது. இதையடுத்து, தமிழக வனத் துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த அந்த வரைவு அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம். அந்த அறிக்கையில் கோவையில் மட்டும் 4 புதிய யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எங்களுடைய விவசாய உறுப்பினர்களின் விவசாய நிலங்கள், வீடுகள், கோவில்கள் இருக்கும் பகுதியும் ஒரு யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வை தமிழக வனத் துறை மேற்கொண்ட போது எங்கள் பகுதி விவசாயிகள் ஒருவரிடம் கூட இது குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் ஒரு கருத்து கேட்பு கூட்டமும் நடத்தவில்லை. இதற்கு மாறாக, எங்கள் பகுதி நிலப்பரப்பையும், சுற்றுச்சூழலையையும் முழுமையாக அறியாத நபர்களை கொண்டு ஒரு தலைப்பட்சமாக இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் பகுதிகளை அந்த குழுவினர் யானை வழித்தடமாக பரிந்துரைத்து இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. அதுமட்டுமின்றி, இல்லாத யானை வழித்தடத்தை புதிதாக கண்டறிந்து அதை விரிவுப்படுத்த 450 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் எனவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.