சர்தார் படேல் சிலையை காண சனிக்கிழமை ஒரே நாளில் 27,000 பேர் வருகை : சாதனை படைக்கும் சுற்றுலா தளம்

சர்தார் படேல் சிலையை காண சனிக்கிழமை ஒரே நாளில் 27,000 பேர் வருகை : சாதனை படைக்கும் சுற்றுலா தளம்

Update: 2018-11-11 07:54 GMT

அக்டோபர் 31ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உலகிலேயே மிக உயர்ந்த சிலையான சர்தார் படேல் சிலையை திறந்து வைத்தார். நவம்பர் 1 ஆம் தேதி பொது மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டதிலிருந்து குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் ஒற்றுமைக்கான சிலையை காண ஒரே நாளில் 27,000 பேர் வருகை தந்துள்ளனர் என்று பி.டி.ஐ செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


கெவடியாவில் உள்ள சர்தார் சரோவார் அணைக்கு அருகே 182 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த சிலை தான் உலகிலேயே மிக உயரமான சிலையாகும்.


ஒவ்வொரு நாளும் 5,000 நபர்கள் சிலைக்குள்ளேயே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கேலரிக்கு செல்லும் அளவுக்கு அதி வேக மின்தூக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து நினைவுச் சின்னத்திற்கு தங்கள் பயணத்தைத் திட்டமிட பொது மக்களுக்கு மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


சிலைக்கு உள்ளே உருவாக்கப்பட்டுள்ள கேலரி 135 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஒரே நேரத்தில் 200 பேர் வரை அங்கு பார்வையிட முடியும்.


கடந்த சனிக்கிழமை அன்று 27,000 சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாக, நர்மதா மாவட்ட கலெக்டர் ஆர்.எஸ்.நினமா, உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் ஞாயிற்றுக்கிழமையான இன்று இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.


தீபாவளி விடுமுறை மற்றும் குஜராத்தி புத்தாண்டு விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்து உள்ளதாக அவர் கூறினார்.


சிலையை பார்வையிடும் பார்வையாளர்களை சிலைக்கு அழைத்துச் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை ஞாயிறன்று 15 முதல் 40 வரை உயர்த்தப்பட்டுள்ளது என நினாமா தெரிவித்தார்.


குஜராத் மாநில அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "சிலையின் உள்கட்டமைப்பின் திறனையும் அளிக்கப்பட்டுள்ள வசதிகளையும் மனதில் வைத்து கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளது.


மேலும், பராமரிப்புக்காக ஒவ்வொரு திங்கள்கிழமையும் சிலை மூடப்படும் என்று அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது.


"ஒற்றுமையின் சிலையின் உள்ளே இரண்டு மின் தூக்கிகள் உள்ளன. ஒரு நாளில் 5,000 நபர்களை கேலரிக்கு எடுத்துச் செல்ல முடியும். எனவே அனைத்து பார்வையாளர்களும் நேரத்தை மனதில் வைத்துகொண்டு வருகை தர வேண்டும்," என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும், "கூட்டம் அதிகரிக்கும் தருணத்தில் பொது மக்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ள வேண்டும். யாரும் சிலையை பார்க்க முடியாமல் வருத்தத்துடன் திரும்ப செல்லும் தருணத்தை அரசு விரும்பவில்லை", என்று மாநில அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


சிலை மட்டுமல்லாமல், பார்வையாளர்கள் மையம், நினைவு பரிசு கடை, கண்காட்சி மண்டபம், பார்வையிடும் கேலரி போன்றவற்றை பொது மக்கள் பார்வையிடலாம்.


சிலை மற்றும் பார்வையிடல் கேலரிக்கு நுழைவு கட்டணமாக ₹350 வசூலிக்கப்படுகிறது. 3-15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ₹200 வசூலிக்கப்படுகிறது.

Similar News