3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம்: பிரதமர் மோடி உறுதி!

Update: 2025-02-24 05:35 GMT

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், கர்ஹா கிராமத்தில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாக பண்டேல்கண்ட் பகுதிக்கு வந்தது தமது அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டமோடி, ஆன்மிக மையமான பாகேஷ்வர் தாம் விரைவில் ஒரு சுகாதார மையமாகவும் மாறும் என்றார். பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் என்றும், முதல் கட்டத்தில் 100 படுக்கை வசதிகள் தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த உன்னதமான பணிக்காக தீரேந்திர சாஸ்திரியைப் பாராட்டிய பிரதமர், பண்டேல்கண்ட் மக்களுக்குத் தமது வாழ்துக்களைத் தெரிவித்தார்.


இப்போதெல்லாம் மதத்தை கேலி செய்து, மக்களைப் பிரிக்கும் அரசியல் தலைவர்கள் சிலர் உள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். சில நேரங்களில், தேசத்தையும் மதத்தையும் பலவீனப்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்தும் அத்தகைய நபர்களுக்கு ஆதரவு கிடைக்கிறது என்று அவர் மேலும் கூறினார். இந்து மதத்தை வெறுக்கும் மக்கள் நீண்ட காலமாக பல்வேறு வடிவங்களில் இருந்து வருகின்றனர் என்று அவர் கூறினார். நமது நம்பிக்கைகள், பாரம்பரியங்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த அம்சங்கள் நமது கலாச்சாரம், கொள்கைகள் மீதான தாக்குதல்கள் என்று குறிப்பிட்டார்.


இத்தகைய நபர்கள் நமது பண்டிகைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகளை குறிவைக்கிறார்கள் எனவும், நமது மதம், கலாச்சாரத்தின் உள்ளார்ந்த முற்போக்கான தன்மையை இழிவுபடுத்தவும் துணிகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நமது சமூகத்தைப் பிளவுபடுத்தி அதன் ஒற்றுமையை உடைக்க வேண்டும் என்ற அவர்களின் செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். இந்தச் சூழலில், நீண்ட காலமாக நாட்டில் ஒற்றுமை என்ற மந்திரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தீரேந்திர சாஸ்திரியின் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.

Tags:    

Similar News