மிக்ஜம் புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ரூபாய் 450 கோடி நிதி உதவி!-அமித்ஷா தகவல்
மிக்ஜம் புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ரூபாய் 450 கோடி நிதி உதவி செய்துள்ளது.
வங்கக்கடலில் உருவான புயலினால் கடந்த 2,3 ,4-ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. அதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். அங்கு நடக்கும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை ஆய்வு செய்துள்ளார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அதில் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் மிக்ஜம் புயலினால் வரலாறு காணாத அளவுக்கு பெருமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு இருந்தது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் பாலங்கள் பொதுகட்டிடங்கள் என பல்வேறு உள் கட்டமைப்புகள் சேதமடைந்தன.
மேலும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5060 கோடி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று காலையில் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் இரண்டு பதிவுகளை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெரு வெள்ளங்களை சென்னை எதிர் கொண்டு வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் இது மூன்றாவதாக பலத்த மழையை பெறும் பெரிய நகரங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை நாம் கண்டு வருகிறோம். இதை பிரதமர் நரேந்திர மோடி நேர்மறையாக அணுகுகிறார். இதற்கு தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி முதல் நகர்ப்புற வெள்ள தணிப்பு திட்டத்திற்கு, தேசிய பேரிடர் தணிப்பு நிதியத்தின் சென்னை பகுதி ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக ரூபாய் 561.29 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.