“கொலிஜியம் பரிந்துரையை மதிக்க வேண்டும்” - ராஜினாமா செய்த சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு அகில இந்திய பார் அசோசியேஷன் அறிவுரை!!

“கொலிஜியம் பரிந்துரையை மதிக்க வேண்டும்” - ராஜினாமா செய்த சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு அகில இந்திய பார் அசோசியேஷன் அறிவுரை!!

Update: 2019-09-13 07:20 GMT


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணி மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டது.


மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு செல்ல மறுத்து தஹில ரமானி, தனது உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் போராட்டம் நடத்தி தங்களின் விஸ்வாசத்தை காட்டினார்கள.


இந்த நிலையில், அகில இந்திய பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் சி. அகர்வாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-


பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த தஹில ரமானியை நீதிபதியாக நியமனம் செய்ததோடு, அதே பம்பாய் உயர் நீதிமன்றத்தில் அவரைவிட மூத்தவர்கள் இருந்தபோதும் கூட பொறுப்பு தலைமை நீதிபதியாக மூன்று முறை நியமித்தது கொலிஜியம்.


அதன்பிறகு பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கொலிஜியம் நியமித்தது. அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், 13 மாதங்களுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.





இதுவரை, கொலிஜியம் மீது எந்த ஒரு மாற்றுக் கருத்தையும் முன்வைக்காத தஹில ரமானி, தற்போது மட்டும் மாற்றுக் கருத்தை முன்வைப்பது ஏற்புடையதல்ல. கொலிஜியம் மீது எந்த ஒரு காரணத்தையும் கூறாமல், பொத்தாம் பொதுவாக தன்னை இடமாற்றம் செய்வதை எதிர்த்து ராஜினாமா செய்தது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.


பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்த போதெல்லாம் அவற்றை ஏற்றுகொண்ட தஹில ரமானி, தற்போது மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றத்தை மட்டும் எதிர்ப்பது ஏற்கத்தக்கதல்ல.


இந்தியாவின் அனைத்து உயர் நீதிமன்றங்ளுக்கும் ஒரே அதிகாரமும், மரியாதையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு உயர் நீதிமன்றம் அமைந்துள்ள இடத்தை பொறுத்தும், அந்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையை வைத்தும் அந்த நீதிமன்றத்தை குறைவாக மதிப்பிடுவதும், அங்கு செல்ல மாட்டேன் என்று கூறுவதும் தவறான முன்னுதாரணம் ஆகும்.


இப்படி ஒவ்வொருவரும் செயல்பட தொடங்கினால், நீதிமன்றங்கள் செயல்படவே இயலாமல் போகும் அச்சம் உள்ளது.


தஹிலரமானியின் ராஜினாமா முடிவு, கொலிஜியத்தை அவமதிப்பதோடு, மேகாலய மக்களையும் இழிவுபடுத்துவதாக உள்ளது.


இவ்வாறு ஆதிஷ் சி. அகர்வாலா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Similar News