'அதிகமாக ரீல்ஸ் பார்ப்பதை தவிர்த்து ஆழ்ந்து தூங்குங்கள்'- மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
மாணவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம்.அதிகமாக ரிலீஸ் பார்க்காதீர்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
பொதுத்தேர்துக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்கி தன்னம்பிக்கை ஊட்டும் முயற்சியாக 'பரிக்ஷா பே சார்ச்சா' என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டில் இருந்து நடத்தி வருகிறார். நேற்று இதன் ஏழாவது ஆண்டு நிகழ்ச்சி டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்தது. இதில் பங்கேற்க இணையதளத்தில் 2 கோடியே 26 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களின் மாநில வாரியாக நூற்றுக்கணக்கானோர் நேரடியாக பாரத் மண்டபத்தில் பங்கேற்றனர். மற்றவர்கள் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியயில் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆகியோருடன் பிரதமர் மோடி உரையாடினார். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
மாணவர்கள் எத்தனையோ அழுத்தங்களையும் தாங்கிக்கொள்ளும் திறனை பெற வேண்டும். ஸ்விட்சை அணைத்தவுடன் அழுத்தம் மறைந்து விடாது. அழுத்தங்களை சமாளிக்க உதவும் வகையில் தங்கள் குழந்தைகளுக்கு மீண்டெழும் திறனை பெற்றோர் ஊட்ட வேண்டும். நல்ல புத்தி, கூர்மையுள்ள கடின உழைப்பாளிகளை மாணவர்கள் தங்களது நண்பர்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும். அவர்களிடம் நீங்கள் உத்வேகம் பெறலாம் .படிப்பு மற்றும் தேர்வு தொடர்பான அழுத்தங்கள் உங்களை மூழ்கடிக்க செய்து விடாதீர்கள். போட்டியும் சவால்களும் உத்வேகமாக இருக்க வேண்டும். ஆனால் போட்டி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
சில பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக செயல்பட்டு இருக்க மாட்டார்கள். உலகத்துக்கு சொல்ல அவர்களிடம் ஒன்றும் இருக்காது. யாரையாவது பார்த்தால் தங்கள் குழந்தைகளின் சாதனைகளை தான் சொல்வார்கள். இப்படி தங்களது குழந்தைகளின் ரிப்போர்ட் கார்டு தங்களது விசிட்டிங் கார்டாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. அது போல் நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பிற குழந்தைகளுடன் ஒப்பிடுவார்கள். அது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதையெல்லாம் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் தங்களை மற்றவர்களுக்கு போட்டியாக கருதக்கூடாது. உங்களுக்கு நீங்கள்தான் போட்டி. மாணவர்கள் சக மாணவர்களாலும், பெற்றோராலும், தங்களாலும் மூன்று விதமான அழுத்தங்களை சந்திக்கிறார்கள். அழுத்தங்களை சுமக்கும் போது அவர்கள் எதிர்பார்த்தபடி செயல்பட முடியாது.