ஒரே நேரத்தில் மூவருக்கு பாரத ரத்னா விருது - பிரதமர் மோடி அறிவிப்பு!
முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ், மற்றும் வேளாண் விஞ்ஞானி மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பிரதமர் மோடி பாரத ரத்னா விருது அறிவித்துள்ளார்.
சுவாமிநாதன் பசுமைப் புரட்சியின் உலகளாவிய தலைவராக இருந்தார். கோதுமை மற்றும் அரிசியின் உயர் விளைச்சல் வகைகளை அறிமுகப்படுத்தி மேலும் மேம்படுத்துவதில் இவரது தலைமை மற்றும் பங்கிற்காக இந்தியாவில் இவர் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக அறியப்பட்டவர். நார்மன் போர்லாக்குடன் சுவாமிநாதனின் கூட்டு அறிவியல் முயற்சிகள், விவசாயிகள் மற்றும் பிற அறிவியலாளர்களுடன் ஒரு வெகுஜன இயக்கத்தை முன்னெடுத்து, பொதுக் கொள்கைகளின் ஆதரவுடன், இந்தியாவையும் பாக்கித்தானையும் 1960களில் பஞ்சம் போன்ற நிலைமைகளில் இருந்து காப்பாற்றியது இவரது சாதனைகளாகும். செப்டம்பர் 28 2023-ல் இவர் இயற்கை எய்தினார். இவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1991 முதல் 96 வரை பிரதமராக பதவி வகித்தவர் பி வி நரசிம்மராவ். இவர் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பேசும் திறன் பெற்றவர் இந்தியாவில் தாராளமய மக்கள் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் சில மாதங்களுக்கு முன்பு இவரது நூற்றாண்டு விழாவை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் மிகவும் எளிமையாக கொண்டாடின. நரசிம்ம ராவின் சாதனைகளுக்காக அவர் பாரத ரத்னா விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் காங்கிரஸ் அல்லாத முதல் முதல் அமைச்சர், 1979ஆம் ஆண்டில் பிரதமர், விவசாயிகளின் மனம் கவர்ந்தவர், வட இந்தியாவில் புதிய அரசியல் இயக்கத்தை தோற்றுவித்தவர் என பெருமைக்குரியவர் சரண் சிங் சௌத்ரி. முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கிற்கு (1902-87) இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில், "நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக இந்த கௌரவம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அவசரநிலையின் போது ஜனநாயகத்திற்கான அவரது அர்ப்பணிப்பு ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஊக்கமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
SOURCE :Indianexpress.com