அமித் ஷா தலைமையில் ஜனவரியில் பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு கூட்டம்!

அமித் ஷா தலைமையில் ஜனவரியில் பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு கூட்டம்!

Update: 2018-12-14 11:54 GMT





பா.ஜ.க-வின் தேசிய செயற்குழுக் கூட்டம் வரும் ஜனவரி மாதம் 11 மற்றும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் பா.ஜ.க எம்.பி-க்கள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க எம்.பி.க்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. பா.ஜ.க தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.


தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணம் குறித்து விவாதிப்பதுடன், நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார உத்தியை வகுப்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் மோடி அறிவுரை வழங்குவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழாவை, வரும் 25-ஆம் தேதி பெரிய அளவில் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் பா.ஜ.க தேசிய செயற்குழுவை வரும் ஜனவரி மாதத்தில் கூட்டுவதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க-வை பலப்படுத்துவது குறித்தும், அயோத்தி உள்ளிட்ட பிரச்சினைகளில் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் முக்கிய முடிவுகள் பா.ஜ.க-வின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.






Similar News