வழிபாட்டிற்கு அனுமதி இல்லை ஆனால் பிரசாதம் மட்டும் விற்பனையா?- பக்தர்கள் கண்டனம் !
Breaking News.
கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்படும் நிலையில், வியாபார நோக்கில் ராமேஸ்வரம் கோயில் முன்பு பிரசாதத்தை மட்டும் விற்பனை செய்வது தவறு என்றும், இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பக்தர்களும் இந்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாரணாசிக்கு இணையான புனித வழிபாட்டுத் தலமாக இராமேசுவரமும் இந்துக்களால் கருதப்படுகின்றது. இங்கே ராமநாதசுவாமி கோவில் பிரசாதம் என்ற பெயரில் அதிரசம், முறுக்கு மற்றும் லட்டு பிரசாதங்களையும் இங்குள்ள 22 தீர்த்தங்களில் முக்கியமான தீர்த்தங்களின் நீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
பொதுவாக சுவாமி பிரசாதங்கள் கோயில் மடப்பள்ளியில் தயாரித்து சுவாமி, அம்மனுக்கு நைவேத்யம், பூஜை செய்த பின் கோயில் வளாகத்திற்குள் பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். கொரோனா காரணமாக கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கோவில் முகப்பு மண்டபத்தின் வெளியே கோவில் பிரசாதத்தை விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பக்தியுடன் விநியோகிக்க வேண்டிய கோவில் பிரசாதத்தை விற்பனை செய்து லாபம் ஈட்ட நினைப்பது நம்பிக்கைகளுக்கு முரணானது என்றும் இதனால் கோவிலுக்கு முன் பிரசாதம் விற்பனை செய்யக்கூடாது என்று இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி துணை செயலாளர் கூறியுள்ளார். கோவிலுக்குள் அனுமதி கொடுக்காத நிலையில் கோவில் பிரசாதத்தை வெளியே வைத்து வியாபாரம் செய்து வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோவில்களை திறப்பதற்கு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : Dinamalar