திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிகரித்த சாதி ரீதியான கொலைகள்: தீர்வு எப்போது?- கேள்வியுடன் தென் மாவட்ட மக்கள்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லையைச் சேர்ந்த தீபக் ராஜா என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக தென் மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் முதல்வருக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.

Update: 2024-05-26 14:17 GMT

தீபக் ராஜா: நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்தவர் சிவகுருமுத்துசாமி மகன் தீபக்ராஜா (வயது 30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் அவரை ரவுடி பட்டியலில் சேர்த்து போலீசார் கண்காணித்து வந்தனர். இவர் கடந்த 20-ந் தேதி தனது வருங்கால மனைவி மற்றும் அவரின் நண்பர்களுடன் நெல்லை- திருச்செந்தூர் சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டிக்கொலை: அப்போது அங்கு பதுங்கி இருந்த கும்பல் கண்இமைக்கும் நேரத்தில் தீபக்ராஜாவை வெட்டிக்கொலை செய்தனர். இதனையடுத்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் கொலை வழக்கோடு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் கைது: இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்ய முயன்ற போது அதில் நவீன் மற்றும் முருகன் ஆகிய இருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். அப்போது இருவருக்கு கை, கால்களில் அடிபட்டுள்ளது. இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் சிறையில் உள்ளனர். மீதமுள்ள 4 பேரில் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.

ஜாதி ரீதியான கொலைகள் தொடர்பு: குறிப்பாக ஜாதி ரீதியாக நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஜாதி பின்னணியோடு அடிக்கடி மோதி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016-ல் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கிலும் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பசுபதி பாண்டியன் ஆதரவாளர்:

மேலும் தீபக் ராஜா கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. எனவே ஜாதி மோதல் காரணமாகவே தீபக் ராஜா கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிகரித்த கொலைகள்: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தென்மாவட்டங்களில் சாதி ரீதியான கொலைகள் அதிகரித்து வருவதாகவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் எப்பொழுது சர்வாதிகாரியாக மாறுவார்?என்றும் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தென்மாவட்ட பிரச்சனைக்கு தீர்வு காண்பாரா? என்றும் தென் மாவட்ட மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல்வர் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

SOURCE :Newspapers 


Similar News