சிஏஏ சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை பெற புதிய வலைதளம் - மத்திய அரசு அறிமுகம்!
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற புதிய வலைதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற தகுதி பெற்ற நபர்கள் விண்ணப்பிப்பதற்கு புதிய வலைதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்ற குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நான்கு ஆண்டுகளாக அமல்படுத்தப்படாமல் இருந்தது.
மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னதாக இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. இதற்காக புதிய வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மதிய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் 2019க்கான குடியுரிமை திருத்த விதிகள் 2024 அறிவிக்கப்பட்டுள்ளன .அதன்படி இந்திய குடியுரிமை பெற தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிப்பதற்கு indiancitizenshiponline.nic.in என்ற புதிய வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைக்காக கைப்பேசி செயலியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
SOURCE :Dinamani