நாடு முழுவதும் அனைத்து பள்ளி கேண்டீன்களிலும் ஜங்க் புட் எனப்படும் நொறுக்குத் தீனிகளை விற்பதற்கும், அது தொடர்பான விளம்பரங்கள் வைக்கப்படுவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து பள்ளி கேண்டீன்களிலும் ஜங்க் புட் எனப்படும் நொறுக்குத் தீனிகளை விற்பதற்கும், அது தொடர்பான விளம்பரங்கள் வைக்கப்படுவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Update: 2019-11-06 05:11 GMT

நாடு முழுவதும் மாணவர்களிடையே ஜங்க் புட் எனப்படும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தேவையற்ற உடல் பருமன், சிறு வயதிலேயே நீரிழிவு போன்ற உடல் ரீதியிலான குறைபாடுகளும், மன ரீதியான குறைபாடுகளும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவித்தன.


எனவே இதனைத் தடுக்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் குழு ஒன்றை நியமித்தது. இந்நிலையில் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.


அதில், பள்ளிகளில் சிற்றுண்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ‘கேண்டீன்’கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றில் பெரும்பாலும் நொறுக்குத்தீனிகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


மேலும் அதிக கொழுப்புகள், காரம் மற்றும் அதிக உப்பு அல்லது இனிப்புகள் நிறைந்த உணவுகள் கேடு விளைவிக்க கூடியது என்று குறிப்பிட்டுள்ள உணவு பாதுகாப்புத்துறை,பள்ளிகளில் உள்ள கேண்டீன்களில் நொறுக்குத்தீனிகள் மற்றும் உடல்நலத்தை பாதிக்கும் உணவுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.


பள்ளிகளை சுற்றி 50 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும், அந்த கடைக்காரர்களும் நொறுக்குத்தீனிகளை விற்பனை செய்தல் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


பள்ளி கேண்டீன்களில் நொறுக்குத்தீனி மற்றும் அதுதொடர்பான விளம்பர பதாகைகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறுதல் கூடாது எனவும், இதுகுறித்து பள்ளி நிர்வாகங்களுக்கும் முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.


அந்தந்த பள்ளி நிர்வாகம் மூலமே தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் என்ன வகையான உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்? அது தரமானதா? என்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதனுடன் மேற்கண்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறது என்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


Similar News