நதி நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு செயற்கை வறட்சியை உருவாக்கும் சீனா - அளவில்லா கம்யூனிஸ்ட் அட்டூழியங்கள்!

நதி நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு செயற்கை வறட்சியை உருவாக்கும் சீனா - அளவில்லா கம்யூனிஸ்ட் அட்டூழியங்கள்!

Update: 2020-07-26 07:58 GMT

அமெரிக்கா-சீனா இடையேயான பனிப்போர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சீன விஷமத்தனத்தை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது‌. இதில் லேட்டஸ்ட் விஷயம் சீனா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பாயும் மேகாங் நதி. சீனா மேகாங் நதி நீரை‌ அணை கட்டி சேமித்து வைத்துக் கொண்டு பிற‌ நாடுகளை நீராதாரத்திற்கு தவிக்கும் நிலையில் தள்ளுகிறது என்று அமெரிக்கா குற்றம்‌சாட்டுகிறது.

மேகாங் நதி சீனாவில் மேல்நிலையிலும் லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாமில் கீழ்நிலையிலும் பாய்கிறது. அதாவது‌ சீனாவிலிருந்து அதன் கீழே இருக்கும் இந்த தென் கிழக்கு ஆசிய‌ நாடுகள் நோக்கிப் பாய்கிறது. நதியின் முன் பகுதி சீனாவில் பாய்வதால் இயற்கையாகவே சீனாவுக்கு அனுகூலமாக இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க நிதி உதவியுடன் Eyes on Earth Inc என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகளில் கீழ்ப்பகுதி மேகாங் நதி தீர நாடுகளில் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி ஏற்பட்டதாக தெரிய வந்தது. மேகாங் நதியை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் இது பேரிடியாக அமைந்ததோடு ஆற்றும் படுகையில் இருக்கும் மணல் மேடுகள் வெளிப்படும் அளவுக்கு நீர் வரத்து குறைந்து விட்டது. இதற்கு நதியின் முற்பகுதியில் சீனா கட்டி‌ வைத்துள்ள அணைக்கட்டுகள் தான் காரணம் என்று Eyes on Earth Inc ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேகாங் நதியில் சீனா அமைத்திருக்கும் 11 அணைகள் 47 பில்லியன் க்யூபிக் மீட்டர் அளவு நீரை தேக்கி வைக்கும் திறன் கொண்டவை என்று இந்த ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. எனவே, தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் போன்ற மேகாங் நதி தீரத்தை நம்பியுள்ள நாடுகளில் 70 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் சீனா மேகாங் நதி நீரை‌ கட்டுப்படுத்தி சேமித்து வைத்துள்ளது.

விவசாயப் பொருளாதாரத்தை நம்பி இருக்கும் இந்த நாடுகளில் உள்ள 12 மில்லியன் குடும்பங்களில் 80% குடும்பங்கள் மேகாங் நதியைச் சார்ந்துள்ளன. அரிசியும் மீனும் தான் இவர்களது முக்கிய உணவே. மேகாங் என்ற பெயரே 'மே நம் காங்' என்பதன் சுருக்கம் தான். இதன் பொருள் 'நீராதாரத்தின் தாய்'. அதாவது காவிரி டெல்டா வாசிகள் 'காவிரித் தாய்' என்று அன்புடன் அழைப்பதைப் போல் மேகாங் நதி இந்த மக்களுக்கு அன்னையைப் போன்றது. எனவே இநாத நதி நீரைத் முறையற்ற வகையில் சேமித்து வைப்பதன் மூலம் தென்கிழக்கு ஆசிய மக்களின் வாழ்வாதாரங்களான அரிசி, மீன் மற்றும் நீரை சீனா பறித்து விட்டது என்றால் அதை மிகையாகாது.

இதற்கெல்லாம் பின்னணி தென் சீனக் கடல். மேகாங் நதி இறுதியாகக் சென்று சேரும் நாடு வியட்நாம். வியட்நாம் தென் சீனக் கடலில் தனது எல்லையையும் தாண்டி ஆக்கிரமிப்பு செலுத்த நினைக்கும் சீனாவின் ஏகாதிபத்திய ‌கொள்கைக்கு எதிர்ப்பு‌ தெரிவித்து வருகிறது. எனவே இந்த சின்னச் சின்ன நாடுகளை வழிக்கு கொண்டு வந்து கடலிலும் ஆதிக்கம்‌ செலுத்த அவர்களது நீர் மற்றும் உணவு ஆதாரத்தை கட்டுப்படுத்தி அராஜகம் செய்கிறது சீனா.

மேகாங் நதி கடலைச் சென்றடையும் வழியில் பல இடங்களில் முற்றிலுமாக வறண்டு போயுள்ளது. இதற்கு பருவநிலை மாற்றத்தை மட்டுமே காரணமாகக் கூறி விட முடியாது. சீனாவின் நீரைத் தேக்கி வைக்கும் நியாயமற்ற செயலும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் வறண்டு போகக் காரணம் தான். இது அணு ஆயுதப் போருக்கு சற்றும் குறைந்ததல்ல என்று கருதப்படுகிறது.

1995ல் முறையான நீர்ப் பங்கீட்டை உறுதி செய்ய Mekong River Commission (MRC) என்ற அமைப்பு நிறுவப்பட்டது. எனினும் இதை அமைத்தபோது போடப்பட்ட ஒப்பந்தங்களின் படி நதியின் முற்பகுதியில் இருக்கும் மியான்மரும் சீனாவும் நடந்து கொள்வதில்லை. Eyes on Earth Inc அமைப்பின் ஆய்வுக் கட்டுரை வெளிவந்த பின் இந்தப் பிரச்சினை சீனா- அமெரிக்கா இடையே மற்றுமொரு வார்த்தைப் போரைத் தொடங்கி வைத்திருக்கிறது.

கம்போடியாவுக்கான அமெரிக்க தூதர் இநாத ஆய்வுக் கட்டுரையைச் சுட்டிக் காட்டி "சீனா தண்ணீரை தேக்கி வைப்பது தான் மேகாங் ஆறு வறண்டு போகக் காரணம்" என்ற தகவல் ஆச்சரியமளிப்பதாகக் கூறி வார்த்தைகளால் வறுத்து எடுத்துள்ளார். சீனா தன் பங்குக்கு அரசால் நடத்தப்பட்ட பத்திரிகைகளுள் ஒன்றான People's Dailyல் 'மேகாங் நதியில் சீனா கட்டிய அணைகளால் லன்சாங்- மேகாங் பகுதியில் வறட்சியை நீக்க முடிந்தது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது' என்று தலைப்பிட்டு தனது செயலை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தது.

அணை கட்டி இருக்காவிட்டால் வறட்சியும் ஏற்பட்டிருக்காது அதை நீக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காதே என்று சீனாவின் உளறலைக் கேலி செய்து கொண்டு இருக்கிறார்கள் வல்லுநர்கள். என்னவாயினும் நதியின் பிற்பகுதியில் இருக்கும் நாடுகளுக்கு எப்போது நீர் கொடுக்க வேண்டும் எப்போது வறட்சியில் வாட் விட வேண்டும் என்பதை முடிவு செய்யும் இடத்தில் சீனா இருக்கிறது என்பது தெளிவாகிறது.

Lancang Mekong Cooperation group (LMC) என்ற புதிய அமைப்பைத் தோற்றுவித்து அதன் மூலம் நதி நீர் பகிர்வு செயல்பாடுகளை மாற்ற நினைக்கும் சீனாவின் செயலுக்கு மற்றொரு அமெரிக்க தூதரும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னர் குறிப்பிட்ட Mekong Cooperation Commission அமைப்பு அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த நீர்ப் பிரச்சினை மற்ற நாடுகளையும் பாதிக்கும் காலம் வெகு தூரம் இல்லை. நீரால் தான் மூன்றாம் உலகப் போர் வரக்கூடுமோ என்ற அச்சம் நனவாகும் நாளும் வெகு தூரம் இல்லை என்றால் அது மிகையாகாது.


நன்றி : TFI post

Similar News