ஆறடிக்கு ₹1.5 லட்சம் ரூபாய்- சாவில் கூட பேதம் பார்க்கும் கிறிஸ்தவ திருச்சபை.!

ஆறடிக்கு ₹1.5 லட்சம் ரூபாய்- சாவில் கூட பேதம் பார்க்கும் கிறிஸ்தவ திருச்சபை.!

Update: 2021-01-19 11:03 GMT

ரியல் எஸ்டேட் மதிப்பு எகிறிக் கொண்டிருக்கும் நிலையில் கிறிஸ்தவ மதத்தில் இருக்கும் பல பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு பிரிவினரும் அவர்கள் செல்லும் சர்ச்சுக்கு கல்லைறையில் இடம் ஒதுக்க என்று குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். 

மாதாமாதம் கட்ட வேண்டிய தசமபாகத்தையும் ஒழுங்காக செலுத்தினால் தான் கல்லறையில் இடம் ஒதுக்கப்படும். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் பாட்டி உயிரிழந்த போது இடம் பெயர்ந்ததால் கோவாவில் அவர் சென்று கொண்டிருந்த சர்ச்சுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்று அவரது உடலைப் புதைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.

இத்தகைய மரபுகளை கிறிஸ்தவ பிரிவுகள் மிகத் தீவிரமாக கடைபிடிக்கின்றன. ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இன்னொரு பிரிவினரின் கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி இல்லை. கோவிட்-19ஆல் ஏற்பட்ட உயிரிழப்புகளின் போது இந்த காரணத்தால் அடக்கம் செய்வதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. சென்னையில் மருத்துவர் சைமன் என்பவர் கோவிட்-19ஆல் உயிரிழந்த போது சி.எஸ்.ஐ சர்ச் அவரது உடலைப் புதைக்க விடவில்லை என்று பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வரிசையில் தற்போது கோவையில் இருக்கும் திருச்சபைகள் ஒன்றாகக் கூடி கொள்ளையில் ஈடுபடுவதாக அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.  கோவை மீனா எஸ்டேட் அருகே பெரியார் நகரில் மாநகராட்சி கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பொதுவான கல்லறை தோட்டம் அமைக்க 3.7 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால் அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை 'செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் சர்ச்' திருச்சபை உரிமை கொண்டாடி கல்லறையில் இடம் ஒதுக்க அதிக விலை நிர்ணயிப்பதாகக் கூறப்படுகிறது. பணம் படைத்தவர்களிடம் அதிக அளவில் பணம் வசூல் செய்து கொண்டு உயிருடன் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது. 

 

மற்றொரு பிரச்சினை என்னவென்றால் செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் சர்ச் தேவாலயத்தின் கீழ் ஹோலி டிரினிட்டி போரேன் சர்ச், செயின்ட் தாமஸ் சர்ச், செயின்ட் ஜார்ஜ் மலபார் சுதந்திர சிரியன் சர்ச் மற்றும் செயின்ட் ஜேக்கபைட் சர்ச் என்று வேறு நான்கு தேவாலயங்கள் உள்ளன. ஆர்த்தோடாக்ஸ் சர்ச் அரசு இடம் ஒதுக்கிய கல்லறையை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டு அதன் கீழ் வரும் நான்கு தேவாலயங்களுக்கு செல்பவர்களுக்கு இடம் ஒதுக்க மறுப்பதாக அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு கூறுகிறது.

பிற தேவாலயங்களைச் சேர்ந்தவர்களை நுழைய விடா வண்ணம் ஆர்த்தோடாக்ஸ் சர்ச் நிர்வாகம் சுற்றுச்சுவர் எழுப்ப முயன்றதாகவும் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் புதிதாக யாரையும் அடக்கம் செய்ய முடியாது என்பதோடு, ஏற்கனவே அடக்கம் செய்தவர்களுக்கு கல்லறை திருநாள் உள்ளிட்ட நாட்களின் போது மரியாதை செய்யவும் இயலா வண்ணம் ஆர்த்தோடாக்ஸ் சர்ச் அராஜகத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

பெரிய அளவில் இயங்கும் தேவாலயங்களைச் சேர்ந்தவர்களுக்கே இந்த கதி என்றால் சிறு சிறு ஜெபக்கூடங்கள் அமைத்து தனியாக இயங்கி வரும் சர்ச்சுகளுக்கு செல்பவர்களின் நிலைமை இதை விட மோசம். அவர்களுக்கு என்று தனி கல்லறை கிடையாது‌. பிறரின் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கவும் விடமாட்டார்கள். எனவே கல்லறைத் தோட்டத்துக்கு அரசு இடம் ஒதுக்க வேண்டும் என்று எண்ணற்ற சிறு கிறிஸ்தவ பிரிவுகள் வேண்டி வருகின்றன.

செயின்ட் மேரிஸ் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையின் அடாவடியால் ஒரே இடத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக 4 பிணங்களை புதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக கிறிஸ்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது போக 6க்கு 3 அடி என்ற அளவிலான அரசுக்கு சொந்தமான இடத்துக்கு₹25,000 முதல் ₹1.5 லட்சம் வரை அதிக விலைக்கு விற்பதாகவும் கிறிஸ்தவ சமூகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பின் கீழ் உள்ள தேவாலயங்களைச் சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்  என்று கூறும் அந்த அமைப்பினர், கல்லறைகளை விலைக்கு வாங்க பெரும் தொகை செலவிடும் அளவுக்கு அவர்களிடம் வசதி இல்லை என்று சுட்டிக் காட்டுகிறது. இந்த விஷயத்தில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் அனைவரும் ஆர்த்தோடாக்ஸ் சர்ச்சுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிகாரிகள் துணையுடன் மாநகராட்சி பெயரில் இருந்த நிலத்துக்கு போலியாக பட்டா தயாரித்து செய்ன்ட் மேரி ஆர்த்தோடாக்ஸ் சர்ச் பெயரில் மாற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்களை அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. செயின்ட் மேரிஸ் ஆர்த்தோடாக்ஸ் சர்ச் நிர்வாகமோ நிலத்தின் உரிமையாளர் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்ததாகவும் அதில் தங்களுக்கு வெற்றி கிடைத்து கல்லறைத் தோட்டத்துக்கு பட்டா பெறப்பட்டதாகவும் கூறுகிறது.

ஆட்சியர், மாநகராட்சி மற்றும் போலீஸ் கமிஷனர் என்று யாரும் நடவடிக்கை எடுக்காததால் இந்த பிரச்சினை தற்போது நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது. மற்றொருபுறம் வேறு இடத்தில் கல்லறைத் தோட்டம் அமைக்க நிலம் ஒதுக்குமாறு அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Similar News