கோவில்கள் ‌‌‌மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் சுவாமி தூக்கும் பணியாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை!

கோவில்கள் ‌‌‌மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் சுவாமி தூக்கும் பணியாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை!

Update: 2020-07-24 03:21 GMT

கொரோனா வைரஸ் பரவலால் உலகமே ஸ்தம்பித்துப் போய் உள்ளது. இந்தியாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சிறிது சிறிதாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் மக்களில் சில பிரிவினர் வாழ்வாதாரம் இன்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோவில் பணியாளர்கள் சாதாரண நாட்களிலேயே வருமானம் போதாமல் துன்புறுவது வழக்கம். இப்போது கொரோனா வைரஸ் பரவலால் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் 'ஸ்ரீ பாதம்" எனப்படும் சுவாமி தூக்கும் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே அவர்களது சார்பில் தமிழக முதல்வருக்கு பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பி உள்ளனர்.

திருக்கோயில் சுவாமி தூக்கும் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ள பத்து அம்ச கோரிக்கைகள் பின்வருமாறு,

1) தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களைத் திறக்க ஆவண செய்யதல்.

2) தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களில் உள்ள சுவாமி தூக்கும் பணியாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது என்பதை அறிந்து கொள்வது.

3) கடந்த நான்கு மாதங்களாக இந்த பணியை மட்டும் நம்பி உள்ள எங்களது குடும்பங்கள் பசியின் பிடியில் உள்ளன

4) இந்த சுவாமி தூக்கும் பணியானது இன்று தொடங்கிய பணி அல்ல. எங்களின் பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து இப்பணியைச் செய்து வருகிறோம். இருந்தும் எங்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

5) திருக்கோயில் நிர்வாகத்தினர் சுவாமி புறப்பாட்டின் போதும் அவர்களின் தேவைக்கு மட்டும் எங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். எங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.

6) தமிழக அரசு எங்கள் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு அந்தந்த திருக்கோயில்களில் நிரந்தர பணியமர்த்தவும் மாதாந்திர ஊதியம் வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

7) அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் திருக்கோயில்களைத் தவிர அனைத்து தனியார் மற்றும் அரசு சாரா திருக்கோயில் பணியாளர்களின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு இக்கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டுகிறோம்.

8) தமிழகத்தில் உள்ள அந்தந்த திருக்கோயில் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டுகிறோம்

9) திருக்கோயிலில் மாதத்தில் குறைந்தது பத்து தினங்கள் மட்டுமே பணி செய்ய இயலும். நாள் ஒன்றுக்கு குறைந்தது ₹ 800 மட்டுமே எங்களுக்கு கிடைக்கும். அதை மட்டுமே பயன்படுத்தி எங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் பெருஞ்சிரமம் ஏற்படுகிறது.

10) எங்களின் பணியானது பொது மக்கள் சிரமமின்றி சுவாமிகளை வணங்குவதற்கு திருக்கோயில் நிர்வாகத்துடன் இணைந்து பொது மக்களின் இல்ல வாசலுக்கே சுவாமியை அழைத்துச் செல்லும் பணி. இதனால் தமிழகத்தில் உள்ள‌ அனைத்து தமிழ்ச் சமூகமும் சிரமமின்றி தரிசனம் செய்ய வழிவகை செய்கிறோம்.

எனவே, தமிழக அரசும் அறநிலையத் துறையும் திருக்கோயில் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள அனைத்து குடும்பங்களின் சூழ்நிலையை தங்கள் கவனத்தில் கொண்டு இக்கோரிக்கைகளை விரைவாக பரிசீலனை செய்யுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் எங்களை அந்தந்த திருக்கோயில்களில் நிரந்தர பணியமர்த்தவும், மாதாந்திர ஊதியம் வழங்கவும் தங்களைக் கேட்டுக் கொள்கிறோம். சென்னையில் மட்டும் குறைந்தது 6,000 குடும்பங்கள் உள்ளன. குடும்பத்தில் உள்ள பாட்டன், தந்தை, மகன் என வம்சாவழி மூலம் இப்பணியைச் செய்து வருகிறோம். சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் குறைந்தது 20,000 குடும்பங்கள்/வம்சாவழியினர் இப்பணியைச் செய்து வருகின்றனர். ஆகவே அரசு இதனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்'‌ என்று ஸ்ரீ பாதம் பணியாளர்கள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேறு வாழ்வாதாரம் இன்றி அல்லல்படும் இத்தகைய தெய்வப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கண்ணியமாக வாழ வழி செய்யும் வகையில் தேவையான உதவிகளைச் செய்து அவர்களது கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஆவண‌ செய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Similar News