விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள், பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு கூட்டணிக்குள் இருந்தே அழுத்தம்..சிவசேனாவின் மாற்றாந்தாய் மனப்பான்மை.!

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள், பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு கூட்டணிக்குள் இருந்தே அழுத்தம்..சிவசேனாவின் மாற்றாந்தாய் மனப்பான்மை.!

Update: 2020-07-15 11:46 GMT

சிவசேனா தலைமையிலான அரசு விநாயகர் சதுர்த்தி மற்றும் பக்ரீத் பண்டிகைக் கொண்டாட்ட விதிமுறைகளில் பாகுபாடு காட்டுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மகாராஷ்டிர‌ மாநிலத்தில் 'கணபதி பப்பா மோரியா' என்ற விண்ணதிரும் கோஷத்துடன் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

பெரிய அளவிலான படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வித விதமான வடிவங்களில் விநாயகர் சிலையை வடிவமைத்து பந்தலிட்டு சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி இறுதியில் கடலில் சென்று கரைப்பது வழக்கம். இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று பரவலை காரணம் காட்டி சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு பல தடைகளையும் கடும் விதிமுறைகளையும் விதித்துள்ளது.

பொது வெளியில் வைக்கப்படும் சிலைகள் 4அடி உயரமே இருக்க வேண்டும்; வீட்டில் வைக்கும் சிலைகள் 2அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கடுமையான விதிகளை வகுத்துள்ளது.

மேலும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கும் நிகழ்வைத் தள்ளி வைக்குமாறும், அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் வரும் மாகி கணேச சதுர்த்தி அன்றோ அல்லது அடுத்த கணேச சதுர்த்தியின் போதோ சிலைகளைக் கரைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. பந்தல்கள் தாங்களாக முன்வந்து நன்கொடை அளிப்போரிடம் மட்டுமே நிதி உதவி பெற வேண்டும் என்றும், கூட்டத்தை ஈர்க்கும் என்பதால் விளம்பரம் செய்யக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஆடல், பாடல் நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து அவற்றுக்கு பதிலாக இரத்த தான முகாம் மற்றும் மருத்துவ முகாம்களை நடத்தவும் கொரோனா வைரஸ், மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. பந்தல்களில் பஜனைகள் உட்பட கலாச்சார நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இதற்குத் தான் தற்போது தடை‌ விதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் உலோக அல்லது மார்பிளால் ஆன சிலைகளையே வழிபாட்டுக்கு பண்படுத்த வேண்டும் என்றும் அப்படியே களிமண் சிலைகள் வைக்கப்பட்டாலும் அவற்றை வீட்டிலேயேவோ அல்லது அருகில் உள்ள செயற்கை குளங்களிலோ மட்டுமே கரைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்துக்கள் பண்டிகைக்கு இவ்வளவு நிபந்தனைகள் போடும் சிவசேனா அரசுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி வரவிருக்கும் பக்ரீத் பண்டிகைக்கு தங்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் பட்டியல் போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

பக்ரீத் பண்டிகையை சிரமமின்றி கொண்டாட கூட்டணியில் இருக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்தே சிவசேனாவுக்கு அழுத்தம் தரப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விநாயகர் சதுர்த்திக்கு பல வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள அரசு பக்ரீத் பண்டிகையைப் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாததால் முஸ்லிம் சமூகத்தினரையும் அமைப்புகளையும் பதட்டமடையச் செய்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ஆரிஃப் அசீம் கான் கூறியுள்ளார். பக்ரீத்துக்கு கால்நடை விற்பனை மற்றும் ‌பலியிடுதல் தொடர்பான விதிமுறைகளை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பலியிடும் நிகழ்வு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மத ரீதியாக மிக முக்கியமானது என்பதால் முதல்வர்‌ மற்றும் உள்துறை அமைச்சருக்கு விரைவாக முடிவெடுக்கும் படி வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்துக்களுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கும் நிலையில் முஸ்லிம்கள் எப்படி பாதுகாப்பாக பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவது என்று தங்களது அமைப்புகள் திட்டமிட்டு விட்டதாக சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் அமைச்சராக இருக்கும் ஆலம் ஷேக் கூறியுள்ளார். 24 வார்டுகளுக்கு 3 ஆட்டுச் சந்தைகள், விற்பவரும் வாங்குபவரும் PPE கவச உடை அணிய வேண்டும், விலங்குகளை வாங்குவதற்கு டோக்கன் முறை என்பன போன்ற ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News