முகக் கவசம் அணியாமை, கூட்டம் கூட்டியது, இ-பாஸ் இன்றி பயணம் செய்ததற்காக கறுப்பர் கூட்டம் சுரேந்தர் நடராஜன் மீது வழக்குப் பதிவு!

முகக் கவசம் அணியாமை, கூட்டம் கூட்டியது, இ-பாஸ் இன்றி பயணம் செய்ததற்காக கறுப்பர் கூட்டம் சுரேந்தர் நடராஜன் மீது வழக்குப் பதிவு!

Update: 2020-07-19 13:33 GMT

கந்த சஷ்டி கவசம் மற்றும் பிற இந்து மத நூல்களை இழிவுபடுத்தி பேசியதாக கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனலுடன் தொடர்புடைய செந்தில் வாசன் மற்றும் சுரேந்தர் நடராஜன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சுரேந்தர் சென்னையிலிருந்து தப்பி சென்று புதுச்சேரியில் ஒளிந்திருந்ததாக செய்திகள் வெளியாகின.

முன் ஜாமீன் கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் புதுச்சேரி ‌அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அப்போது முகக் கவசம் அணியாமல் இருந்ததோடு சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் பலரோடு காவல்நிலையத்திற்கு வந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. அங்கு அவர் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி வேறு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அரியாங்குப்பம் காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில் சென்னை காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். இ-பாஸ் இல்லாமல் சுரேந்தர் எப்படி புதுச்சேரி‌ சென்று தலைமறைவானார் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது அரியாங்குப்பம் கிராம் நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் புதுச்சேரி காவல்துறையினர் அவர் மீது ஊரடங்கு காலத்தில் இ-பாஸ் இன்றி பயணம் செய்தது, முக கவசம் அணியாமல் வந்தது, அனுமதியில்லாமல் கூட்டம் கூட்டியது ஆகிய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News