முத்தலாக் – மிகப்பெரும் சீர்திருத்தம், சிறப்பான பலன் - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பெருமிதம்!

முத்தலாக் – மிகப்பெரும் சீர்திருத்தம், சிறப்பான பலன் - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பெருமிதம்!

Update: 2020-07-22 12:47 GMT

இந்திய வரலாற்றில் ஆகஸ்ட் மாதம் என்பது "புரட்சி, உரிமைகள், சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கான மாதம்" என அங்கீகாரம் பெற்றுள்ளது. ஆகஸ்ட் - 8 வெள்ளையனே வெளியேறு இயக்கம்; ஆகஸ்ட் - 15 இந்திய விடுதலை நாள்; ஆகஸ்ட்- 19 "உலக மனிதத்தன்மைக்கான நாள்", ஆகஸ்ட் - 20 "சத்பவன திவஸ்", ஆகஸ்ட் - 5 அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு அகற்றப்பட்டது என இந்த நாட்கள் அனைத்துமே இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாட்களாகத் திகழ்கின்றன.

ஆகஸ்ட் முதல் தேதி என்பது முத்தலாக் என்ற சமூகக் கொடுமையில் இருந்து முஸ்லீம் பெண்களை விடுவித்த நாளாகும். நம்நாட்டின் வரலாற்றில் ஆகஸ்ட் முதல் தேதி என்பது "முஸ்லீம் பெண்களின் உரிமைகள் தினம்" என பதிவு செய்யப்பட்டுள்ளது.

முத்தலாக் அல்லது தலாக்-அ-பிதாத் என்று அழைக்கப்படுவது இஸ்லாமிய வகைப்பட்டதோ அல்லது சட்டபூர்வமானதோ அல்ல. அவ்வாறு இருந்தும் கூட, இந்த முத்தலாக் என்ற சமூகக் கொடுமைக்கு "வாக்கு வணிகர்"களால் "அரசியல்ரீதியான ஆதரவு" அளிக்கப்பட்டு வந்தது.

2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி என்பது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு நாளாகும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திர்ணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட "மதச்சார்பின்மைக்காகப் போராடுவோர்" என்று கூறப்படுவோரால் தடுக்கப்பட்ட போதிலும் இந்த முத்தாலாக் என்ற சமூகக்கொடுமைக்கு எதிரான மசோதா அன்று தான் சட்டமாக உருப்பெற்றது.

பாலின சமத்துவத்தை உறுதி செய்து, முஸ்லீம் பெண்களின் அரசியலமைப்புச்சட்ட ரீதியான, அடிப்படையான மற்றும் ஜனநாயகரீதியான உரிமைகளை வலுப்படுத்திய நாளாகவும் ஆகஸ்ட் முதல் தேதி மாறியது, மேலும் இது இந்தியாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேராக உள்ள பெண்களுக்கு நம்பிக்கையையும் அளித்தது. இந்திய ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற வரலாற்றில் ஆகஸ்ட் முதல் தேதி என்றும் ஒரு பொன்னான தருணமாக விளங்கும்.

ஷாபானு வழக்கில் மாண்புமிகு உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு தீர்ப்பை வழங்கிய போது இந்த சமூகக் கொடுமையான முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் 1986-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டிருக்கலாம். அப்போது மக்களவையில் மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் 400 பேரும், மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில் 159 பேரும் என நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்தது. ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த ராஜீவ் காந்தி அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை செயலற்றதாக ஆக்கவே நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருந்த வலிமையைப் பயன்படுத்தியது என்பதோடு முஸ்லீம் பெண்களுக்கான அரசியல் அமைப்புச்சட்ட ரீதியான, அடிப்படையான உரிமைகளை மறுதலித்தது.

அப்போது இருந்த காங்கிரஸ் அரசு ஒரு சில "குறுகிய மனம்படைத்த வெறியர்களின்" நியாயமற்ற கோரிக்கைகளுக்கு முன்பாக அடிபணிந்து, முஸ்லீம் பெண்களுக்கு அவர்களின் அரசியல் அமைப்புச்சட்ட ரீதியான உரிமைகளை மறுதலிப்பது என்ற குற்றத்தை இழைத்தது. காங்கிரஸ் "அந்த தருணத்தில் செய்த தவறு" என்பது முஸ்லீம் பெண்களுக்கு "பல தசாப்தங்களுக்கான தண்டனை"யாக மாறியது. வாக்குகளைப் பெறுவதைப் பற்றியே காங்கிரஸ் கட்சி கவலைப்பட்டுக் கொண்டிருந்தது எனில், எமது அரசு சமூக சீர்திருத்தம் குறித்தே கவலைப்பட்டது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தான் இந்தியா செயல்படுகிறதே தவிர, ஷரியத் அல்லது வேறு எந்தவொரு மதரீதியான நூல்களின் அடிப்படையில் அல்ல. இதற்கு முன்பு சதி (உடன்கட்டை ஏறுதல்), குழந்தைத் திருமணம் போன்ற சமூகக்கொடுமைகளை அகற்றுவதற்காக பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முத்தலாக் சட்டம் என்பது மதத்தோடு எந்தவிதமான தொடர்பும் உடையதல்ல. மனிதத் தன்மையற்ற, கொடூரமான, அமைப்புச்சட்ட நடைமுறைக்கு விரோதமான ஒரு சமூகக்கொடுமைக்கு முடிவு கட்டுவதன் மூலம் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. மூன்று முறை வெறும் வாயால் தலாக் என்று சொல்வதன் மூலம் உடனடியாக விவாகரத்து என்பது சட்டவிரோதமானது. கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும், ஏன் சமீபத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் மூலமாகவும் கூட முஸ்லீம் பெண்களின் திருமணம் ரத்து செய்யப்பட்ட பல்வேறு சம்பவங்களும் வெளிவந்துள்ளன. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் உறுதிபூண்டுள்ள ஓர் அரசினால், உணர்வுப்பூர்வமான ஒரு நாட்டினால் இத்தகைய சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

வெகுநாட்களுக்கு முன்பாகவே முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகள் பலவும் முத்தலாக் என்பது சட்டவிரோதமானது; முஸ்லீம் கலாச்சாரத் தன்மையற்றது என அறிவித்துள்ளன. இந்த சமூகக் கொடுமையை முதன் முதலில் 1929-ஆம் ஆண்டிலேயே ஒழித்துக் கட்டிய முதல் முஸ்லீம் நாடு எகிப்து ஆகும். பின்பு 1929-இல் சூடான், 1953-இல் சிரியா, 1956-இல் பாகிஸ்தான், 1969-இல் மலேசியா மற்றும் 1972-இல் வங்கதேசம் ஆகிய நாடுகள் முத்தலாக் பழக்கத்தை சட்டவிரோதம் என அறிவித்தன. மேலும் சைப்ரஸ், ஜோர்டான், அல்ஜீரியா, ஈரான், புரூனே, மொரோக்கோ, கட்டார், ஐக்கிய அரபுக் குடியரசு நாடுகள் ஆகியவையும் கூட இந்த சமூகக்கொடுமையை பல ஆண்டுகளுக்கு முன்பே ஒழித்துக் கட்டியிருந்தன. இருந்தபோதிலும் மனிதத் தன்மையற்ற, கொடூரமான இந்த நடைமுறையை இந்தியா ஒழித்துக் கட்டுவதற்கு 70 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்திறன்மிக்கதாகச் செய்யும் வகையில் முத்தலாக் வழக்கத்திற்கு எதிரான சட்டத்தை கொண்டுவந்தது. 2017-ஆம் ஆண்டு மே 18 அன்று வழங்கிய தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் முத்தலாக் என்பது அரசியல் அமைப்புச் சட்டரீதியாக ஏற்புடையதல்ல என்று அறிவித்திருந்தது. முத்தலாக் வழக்கத்தை ஒழித்துக் கட்டியதன் மூலம் மோடி அரசு முஸ்லீம் பெண்களின் சமூக-பொருளாதார, அடிப்படையான, அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான உரிமைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

முத்தலாக் வழக்கத்திற்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது. அதன் பிறகு முத்தலாக் சொல்லும் வழக்கமானது சுமார் 82 சதவீதம் குறைந்துள்ளது. இது தொடர்பாக ஏதாவது தகவல் தெரியப்படுத்தும் போது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்துப் பிரிவினரையும் வலுப்படுத்துவது; சமூக சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின அரசு மிகுந்த உறுதிப்பாட்டோடு செயல்பட்டு வருகிறது. முஸ்லீம் பெண்களின் மீது திணிக்கப்படும் விவாகரத்து பற்றி மோடி அரசு ஏன் கவலைப்படுகிறது? சமூக, பொருளாதார, கல்வி ரீதியாக அவர்கள் வலுப்பெறுவதற்காக அரசாங்கம் ஏன் எதையும் செய்யவில்லை? என்பது போன்ற நியாயமற்ற வாதத்தையும் ஒரு சில அரசியல் கட்சிகள் முன்வைக்கின்றன. முஸ்லீம் பெண்கள் உள்ளிட்டு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினையும் உள்ளிழுத்து வலுப்படுத்தும் வேலையைத்தான் கடந்த ஆறு வருடங்களாக மோடி அரசு செய்துவருகிறது என்பதையே இத்தகைய கேள்விகளை எழுப்புவோருக்கு நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.

அனைத்துப் பிரிவினரின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட மோடி அரசின் முயற்சிகள் சமமான அளவில் முஸ்லீம் பெண்களின் நலனையும் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் சிறுபான்மைப் பிரிவினைச் சேர்ந்த 3 கோடியே 87 லட்சம் மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 60 சதவீத மாணவிகளும் அடங்குவர். அரசின் 'ஹுனார் ஹாட்' திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையிலான முஸ்லீம் பெண்களுக்கு வேலையும், வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு திறன் மேம்பாட்டிற்கான திட்டங்களின் மூலம் சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்த பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றினால் பயன்பெற்றோரில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். (ஆண்களின் துணை இல்லாமல் தனியாக) ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை மோடி அரசு உறுதிப்படுத்திய பிறகு மொத்தம் 3040 பெண்கள் ஹஜ் யாத்திரையை 2018-ஆம் ஆண்டில் மேற்கொண்டனர்.

இந்த ஆண்டும் கூட ஆண்களின் துணையில்லாமல் தனியாக ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கென 2300-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். 2020-ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரைக்கான அவர்களது விண்ணப்பத்தின் அடிப்படையில் 2021-ஆம் ஆண்டில் அவர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள இந்தப் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும். மேலும் புதிதாக விண்ணப்பிக்கும் பெண்களுக்கும் அடுத்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

மோடி அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் சமமான அளவில் முஸ்லீம் பெண்களுக்கும் பயனளித்து வருகின்றன. அரசின் மக்கள் நலத் திட்டங்களில் எந்தவொரு குழுவிற்கும் எதிராக பாரபட்சம் காட்டப்படுகிறது என எதிர்கட்சியினாலும் "வழக்கமாக மோடியைக் குறை கூறி" வருவோராலும் எந்தவொரு கேள்வியையும் எழுப்ப முடியவில்லை. அனைவரையும் உள்ளடக்கிய அதிகாரமளித்தலுக்கான எமது முயற்சிகள் நடைமுறையில் பயனளித்து வருகின்றன. ஏழைகளுக்கு 2 கோடி வீடுகளை எமது அரசு வழங்கிய போது அதில் பயன் பெற்றோரில் 31 சதவீதம் பேர் சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். நாட்டிலுள்ள அதிக எண்ணிக்கையிலான கிராமங்களுக்கு எமது அரசு மின்சார வசதி செய்து தந்துள்ளது. சிறுபான்மையினர் பெரும்பான்மையாக உள்ள, இருட்டிலேயே இதுவரை வாழ்ந்து வந்த அதிக எண்ணிக்கையிலான கிராமங்களுக்கும் இப்போது மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.

"விவசாயிகளை கவுரவிப்பதற்கான நிதி"யின் கீழ் 22 கோடி விவசாயிகளுக்கு எமது அரசு வசதிகளை செய்து தந்த போது அவர்களில் 33 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். "உஜ்வாலா (சமையல் எரிவாயு) திட்டம்" மூலம் பயனடையும் 8 கோடிக்கும் மேலானவர்களில் சுமார் 37 சதவீதம் பேர் சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். "முத்ரா திட்ட"த்தின் கீழ் சிறு மற்றும் நடுத்த வணிக நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இதர பொருளாதார நடவடிக்கைகளுக்கு என சுமார் 24 கோடி பேருக்கு எளிதான வகையில் கடன் வசதியை எமது அரசு வழங்கிய போது அதில் 36 சதவீதத்திற்கும் அதிகமாக பயனடைந்தோர் சிறுபான்மை பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இத்தகைய மக்கள் நலத்திட்டங்களின் மூலம் முஸ்லீம் பெண்களும் கணிசமான அளவில் பயனடைந்துள்ளனர் என்பதோடு பொதுவான வளர்ச்சிப் பாதையில் அவர்களும் சமமான பங்கேற்பாளர்களாக மாறியுள்ளனர். என்று தெரிவித்தார்.

Similar News