நடப்பு ஆண்டில் வெங்காயம் விலை ஏறுவதை தடுக்க ஜரூரான ஏற்பாடுகள் !! விவசாயிகளையும், பொதுமக்களையும் காக்க மத்திய அரசு அசத்தல் நடவடிக்கை

நடப்பு ஆண்டில் வெங்காயம் விலை ஏறுவதை தடுக்க ஜரூரான ஏற்பாடுகள் !! விவசாயிகளையும், பொதுமக்களையும் காக்க மத்திய அரசு அசத்தல் நடவடிக்கை

Update: 2020-08-07 05:31 GMT

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் பிறந்தாலே போதும் தொடர்ச்சியாக பண்டிகைகள் வந்து கொண்டே இருக்கும். ஜனவரி மாதம் வரை ஏராளமான சிறிய மற்றும் மிகப்பெரிய பண்டிகைகள் வரிசையாக வந்து கொண்டிருக்கும். இந்த நிலையில் வெங்காயம் அமோக விளைச்சலை கண்டாலும் சரி.. அல்லது விளைச்சல் வீழ்ந்து போனாலும் சரி வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து இருக்கும்.

சென்ற ஆண்டு கூட நாடு முழுவதும் ரூ.100 வரை உயர்ந்தது. நாட்டின் சில இடங்களில் ரூ.200 வரை கூட விற்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வெங்காயத்தின் வெளிநாட்டு ஏற்றுமதியை குறைக்கும் நடைவடிக்கையையும் அரசு எடுப்பது வாடிக்கை. என்றாலும் இடைத்தரகர்களால் சேமிக்கப்படும் வெங்காயமே விலையை நிர்ணயித்து மக்களை அழ வைக்கும். இந்த நிலையில் இவற்றை தடுக்கும் விதத்தில் மத்திய அரசு சிறப்பான நடவடிக்கைளை இந்த ஆண்டு எடுத்துள்ளது. இதன் காரணமாக வெங்காய விலை உயரும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) ஏற்கனவே ஒரு பெரிய வெங்காயக் கிடங்கைத் தயார் செய்துள்ளது. அரசாங்கத்தின் சார்பில் இந்த கூட்டமைப்பு விவசாயிகளிடமிருந்து தற்போதைய விலை விகிதத்தில் வெங்காயத்தை நேரடியாக வாங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 95,000 டன் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து NAFED வாங்கியுள்ளது. ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு, 2018-19 ராபி பயிரில் 57,000 டன் வெங்காயத்தை அரசாங்கத்தின் சார்பில் NAFED வாங்கியது. ஆனால் அது போதாததால், அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை வாங்க வேண்டியிருந்தது. தற்போது, 1 லட்சம் டன் வெங்காயத்தை வாங்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது விவசாயிகளிடமிருந்து இன்னும் அதிக வெங்காயம் வாங்கப்பட உள்ளது.

அடுத்த 2-4 நாட்களில் 1 லட்சம் டன் வெங்காயம் வாங்கும் இலக்கும் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக NAFED இன் கூடுதல் நிர்வாக இயக்குனர் எஸ்.கே.சிங் தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு-மூன்று நாட்களில் 1 லட்சம் டன் வெங்காயம் வாங்குவதற்கான இலக்கு நிறைவடையும். ராபி பயிராக விளையும் வெங்காயத்தை சேகரித்து வைப்பது சாத்தியமான விஷயமாகும். உண்மையில், ராபி பயிரின் (Rabi crop) வெங்காயம் காரீப் பயிரை விட நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்கும்.

தற்போதைய சந்தை விகிதத்தில் மகாராஷ்டிரா விவசாயிகளிடமிருந்து NAFED சுமார் 86,000 டன் வெங்காயத்தை வாங்கியுள்ளது. இந்த முறை மகாராஷ்டிராவிலிருந்து 80,000 டன் வாங்க இலக்கு இருந்தது. ஆனால் NAFED அதை விட அதிக வெங்காயத்தை வாங்கியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து 1 லட்சம் டன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. எனவே அரசு முதன் முதலாக உஷார் நடவடிக்கைகள் எடுத்துள்ளதால் வெங்காயம் விலை மக்களை அழவைக்கும் விதத்தில் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

Similar News