ஊரடங்கால் பசியால் தவித்த பறவை, கிளி, காகங்களுக்கு இரை போடும் பாமக தலைவர் ஜி.கே.மணி.!

ஊரடங்கால் பசியால் தவித்த பறவை, கிளி, காகங்களுக்கு இரை போடும் பாமக தலைவர் ஜி.கே.மணி.!

Update: 2020-04-15 09:28 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வெளியே வரமால் இருப்பதால் பறவைகள் இரையின்றி தவித்து வருகிறது.

பாமக தலைவர் ஜி.கே.மணி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனாவினால் மனித குலத்திற்கு பாதிப்பு-காக்கை, புறா, கிளி, மைனா, குருவி உள்ளிட்ட பறவைகளுக்கும் இரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உலக வரலாறு கண்டிராத வகையில் கொரோனா கொடிய வைரஸ் உலக மக்களையே வெளியே வந்து செயல்படவிடாமல் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்துள்ளது. ஆட்டிப் படைத்து வருகிறது.

விரைவில் வெளியே வருவோம் என்ற நம்பிக்கையுடன் பொறுமையுடன் இருப்போம்.

நகரப் பகுதிகளில் காக்கை, புறா, கிளி, மைனா, குருவி உள்ளிட்ட பறவைகளுக்கு ஆர்வலர்கள் காலை, மாலை இரை போடுவது வழக்கம்.

அவர்கள் வெளியே வராததால் இரை தேடி அலைவதோடு கூட்டம் கூட்டமாய் சேர்ந்து சத்தம் (இரைச்சல்) போடுகின்றன.

தினமும் பார்க்கிறேன். நான் வீட்டில் இருக்கும்போது காலையில் வெளியே வந்தவுடன் மரங்களில் உள்ள பறவைகள் என்னை நோக்கி ஏராளமாக பறந்து வரும். இரை போடுவேன். நான் வெளியில் சென்று விட்ட நாட்களில் பார்த்து ஏங்கி செல்லும்.

மீண்டும் வீட்டிற்கு வந்த போது காலையில் வெளியே வந்து பார்த்தால் சில நாட்களில் அந்த நேரம் வராதபோது நான் கா... கா... என்று கத்துவேன் ஒன்றிரண்டு காக்கைகள் பறந்துவரும்.

அவைகள் கா... கா... என்று கரைந்தவுடன் மிகப் பெரிய கூட்டமே வந்து விடும். வழக்கம்போல் இரை போடுவேன்.

ஆனால் தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு நாட்களில் நான் காலை வெளியே வந்தவுடன் கூட்டமே காத்திருந்து என்னை சுற்றிக்கொள்ளும்.

கையில் எடுத்துப் போடும்போது பறந்து, பறந்து ஓடிக் கொத்தி திண்பது பரிதாபமாக உள்ளது.

அதிலும் சில காக்கைகள் நான் கையில் எடுக்கும்போதே எகிறி கையிலேயே கொத்தி எடுத்துக்கொள்கிறது. கூட்டம் அதிகரித்து வருகின்றது.

தற்போது காலையில் நேரமாகவே மரங்களில் கூட்டமாக அமர்ந்துகொண்டு ஒரே சத்தம், கூச்சல்.

பறவை ஆய்வாளர்கள் வெளியே வருவதில்லை, வேலை செய்யும் யாரும் இடங்களுக்கு போவதில்லை. பறவைகளும் உணவு (இரை) இல்லாமல் அலைவது மிகுந்த கவலையளிக்கிறது.

கொரோனாவின் பாதிப்பு எந்த அளவுக்கு எங்கெல்லாம் உள்ளது என்பது வேதனையோ வேதனை.

என்று விலகும் இந்த கொரோனா?

அன்று நிலவி வந்த சூழல் காண

சுழன்று உலவி வெளிவரும் காலம்

நன்றாய் வெல்வோம் மிக விரைவில்...

பொறுத்திரு... பாதுகாத்திரு... இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இவரை போன்று பல நகரங்களில் உள்ள பறவைகளுக்கும் தங்களால் முடிந்த இரையை வீட்டு மாடிகளில் வைத்தால் பறவைகளின் பசி போக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை. 

Similar News