பாதிரியார் உதவியுடன் போலி திருமண சான்றிதழ் பெற்று கல்லூரிப் பெண்ணை மிரட்டிய அதிர்ச்சி சம்பவம்.!

பாதிரியார் உதவியுடன் போலி திருமண சான்றிதழ் பெற்று கல்லூரிப் பெண்ணை மிரட்டிய அதிர்ச்சி சம்பவம்.!

Update: 2020-11-13 10:42 GMT

போலியாக திருமண சான்றிதழ் தயாரித்து, பெண்ணை சேர்ந்து வாழ வற்புறுத்திய சம்பவம் நீதிபதிகளையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தூத்துக்குடி லூர்தம்மாள் ஆலயத்தில் திருமணம் நடந்ததாகக் கூறி போலியான திருமணச் சான்றிதழை தயார் செய்து இளம் பெண்ணை மிரட்டிய டார்வின் என்ற இளைஞர், பதிவாளர், சார்பதிவாளர் புன்னைக்காயல் புனித சேவியர் ஆலய பங்குத்தந்தை பிராங்கிளின் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்த போது டார்வின் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் தற்போது கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார். இவருக்கும் டார்வினுக்கும் கடந்த 8.8.2017 அன்று தூத்துக்குடி லூர்தம்மாள் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றதற்கான சான்றினை பெற்றுள்ளாதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

இந்த ஆவணத்தில் பங்குத்தந்தை அளித்த சான்றிதழும் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது அந்த நாளில் தேவாலயத்தில் அப்படி ஒரு திருமணமே நடைபெறவில்லை என்று பங்குத்தந்தை மறுத்துள்ளார். மேலும் திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ள நாளன்று பாதிக்கப்பட்ட பெண் கல்லூரியில் செய்முறைத் தேர்வில் பங்கேற்று உள்ளார் என்பதற்கான வருகைப் பதிவேடு ஆதாரமும் உள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த போலி திருமண சான்றிதழை காட்டி தன்னுடன் வந்து விடுமாறு டார்வின் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கீழூர் சார் பதிவாளர் வழங்கிய திருமணச் சான்றிதழை ரத்து செய்யுமாறு மாவட்ட பதிவாளரிடம் மனு அளித்தும் அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அந்தப் பெண் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புன்னைக்காயல் புனித சேவியர் ஆலய பங்குத்தந்தை பிராங்கிளின், சார் பதிவாளர், பதிவாளர் ஆகியோர் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Similar News