ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் 490 ஏக்கர் கோவில் நிலம்- நீதிமன்ற உத்தரவால் நோட்டீஸ்!
கரூரில் அமைந்துள்ள வெண்ணைமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான 490 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கரூர் மாவட்டத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வெண்ணைமலை திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இடும்பன், விநாயகர் மற்றும் மலைக்காவலர் சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலை பற்றிய இலக்கிய சிறப்புமிக்க வரலாற்றை ஒளவையார் மூவரம்மானையில் பாடியுள்ளார். மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் இந்தக் திருக்கோவில் சொத்துக்கள் தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் பல வருடங்களாக சிக்கியுள்ளன.
இந்த கோவிலுக்கு சொந்தமான 490 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அறநிலையத் துறையிடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ன. இதனைத் தொடர்ந்து வெண்ணைமலை கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக 37 பேருக்கு அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு இதுகுறித்து திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் வெண்ணமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான 497 ஏக்கர் நிலங்களில் பல விவசாயத்திற்காகவும் கட்டிடங்கள் கட்டப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
அதன் பலனாக ஆக்கிரமிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ரூ.1000 கோடி மதிப்புள்ள 73 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன. தற்போது இன்னும் ஆக்கிரமிப்பில் உள்ள 490 ஏக்கர் நிலங்களை மீட்க அறநிலையத்துறை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜனவரி 12ஆம் தேதிக்குள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் காலி செய்ய வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு கிராமத்தையே ஆக்கிரமிப்பாளர்கள் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் நிலையில் கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு முறையாக வாடகை விதித்து வசூலிக்கப்பட்டால் வருமானம் அதிகரித்து தொழிலை மேம்படுத்த முடியும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Source : The ஹிந்து