டிஜிட்டல் ரூபாய் நாளை அறிமுகம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சில்லறை பண பரிமாற்றத்துக்கான டிஜிட்டல் ரூபாய் நாளை அறிமுகம் செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
காகித வடிவிலான பணத்துக்கு போட்டியாக தனியார் சார்பில் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பின்னணியில் நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படும் என்றும் அதிக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மொத்த பண பரிமாற்றத்துக்கான டிஜிட்டல் ரூபாய் சோதனை அடிப்படையில் இம்மாதம் ஒன்னாம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சில்லறை பண பரிமாற்றத்துக்கான டிஜிட்டல் ரூபாய் நாளை அறிமுகம் செய்யப்படுகிறது. இதை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிஜிட்டல் டோக்கன் வடிவத்தில் இந்த ரூபாய் இருக்கும். இதற்கான குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூர் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் வெளியாகிறது. படிப்படியாக கொச்சி உள்ளிட்ட ஒன்பது நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் முதல் கட்டமாக பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ் வங்கி, ஐ.டி.எப்.சி ஃபர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படும். படிப்படியாக பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட நான்கு வங்கிகள் சேர்க்கப்படும். தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் மற்றும் உலோக நாணயங்களின் அதே மதிப்பில் டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படுகிறது. செல்போன் செயலி வடிவத்தில் இந்த வங்கிகள் அளிக்கும் மின்னணு பணப்பை மூலமாக பண பரிமாற்றம் செய்யலாம் .சில்லரை வாடிக்கையாளர்களும் வர்த்தகர்களும் இதில் பங்கேற்கலாம்.
தனிநபர்- தனிநபர் இடையிலும், தனிநபர்- வர்த்தகர் இடையிலும் பணப்பரிமாற்றம் செய்யலாம். வர்த்தகரின் இடத்தில் வைக்கப்பட்டுள்ள 'கியூஆர் 'கோடை பயன்படுத்தி அவருக்கு பணம் செலுத்தலாம். காகித பணத்தை போல் டிஜிட்டல் ரூபாய்க்கு வட்டி வழங்கப்படாது. இதை வங்கி டெபாசிட் போன்ற இதர பண வடிவத்திலும் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.