வசதிகள் இல்லை என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற டாக்டர்கள் மறுக்க முடியாது - ஐகோர்ட் அதிரடி

தங்களது படிப்புக்கு ஏற்ற வசதி வாய்ப்புகள் இல்லை என்று கூறிஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற முதுநிலை டாக்டர்கள் மறுக்க முடியாது என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-07 07:30 GMT

தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவ மேற்படிப்பு முடித்த டாக்டர்கள் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இந்த நிலையில் முதல் நிலை மருத்துவ படிப்பு முடித்த 19 டாக்டர்கள் தங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய வசதிகள் இல்லை என்று கூறி தங்களுக்கான பணி நியமனத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஏ.ன் ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது.


அப்போது மனுதாரர்கள் தரப்பில் மருத்துவ படிப்பில் நிபுணத்துவம் பெற்ற தங்களை அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் மட்டுமே நியமிக்க வேண்டும் . எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமித்திருப்பதை தவறானது என்று வாதிடப்பட்டது.


தமிழ்நாடு அரசு தரப்பில் மனுதாரர்களில் எட்டு பேர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் எஞ்சிய 11 பேர் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு டாக்டர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர் கலந்தாய்வின்போது அவர்கள் தேர்வு செய்த இடங்களில் தான் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது. நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-


மருத்துவ மேற்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு அதிகமான தொகையை செலவு செய்கிறது. அதற்கு பிரதிபலனாக மேற்படிப்பு படிக்கும் டாக்டர்கள் இந்த சமுதாயத்திற்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இரண்டு ஆண்டுகள் கண்டிப்பாக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையே விதிக்கப்பட்டுள்ளது.


இந்த சேவையை முதல்நிலை டாக்டர்கள் இலவசமாக செய்வதில்லை. ஊதியம் பெற்றுக் கொண்டுதான் செய்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில் தங்களது படிப்புக்கு ஏற்ற வசதி வாய்ப்புகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லை. அங்கு பணியாற்ற முடியாது என மருத்துவர்கள் மறுப்பு தெரிவிக்க முடியாது.


இந்த மருத்துவ நிபுணர்களின் சிறப்பு சிகிச்சை கிராமப்புற மக்களுக்கும் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். தங்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை பொதுமக்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கக்கூடிய நிலையில் அந்த மதிப்பிற்கு கடவுளர்கள் தங்களது பொன்னான நேரத்தை இதுபோல வழக்கு தொடர்ந்து வீணடிக்க கூடாது. எனவே மனுதாரர்கள் 19 பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வருகிற பத்தாம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.



 


Similar News