சாட்டையை சுழற்றிய எடப்பாடி! மண்டியிட்ட தமிமுன் அன்சாரி, கருணாஸ்!

சாட்டையை சுழற்றிய எடப்பாடி! மண்டியிட்ட தமிமுன் அன்சாரி, கருணாஸ்!

Update: 2020-01-11 06:32 GMT


கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ். ஆனால் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு இவர்கள், திமுகவிற்கு கூஜா தூக்க தொடங்கினார்கள். அதிமுகவின் அதிகாரப்பூர்வ எம்எல்ஏக்களாக இருந்துகொண்டே, அதிமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்துள்ளனர். அதிமுக அரசு எடுக்கின்ற நிலைப்பாட்டிற்கு நேர் எதிராக இவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.


சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களில் தமிமுன் அன்சாரியும், கருணாசும் கலந்து கொண்டனர். ஒரு படி மேலே போய் “சட்டசபையை முற்றுகையிடுவோம்” என்று அதிமுக அரசை தமிமுன் அன்சாரி மிரட்டினார். மேலும் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையை புறக்கணித்து திமுகவினருடன் வெளிநடப்பு செய்தனர் தமிமுன் அன்சாரியும் கருணாசும்.


அதிமுகவில் இருந்து கொண்டே, அதிமுக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் அதிமுக முன்னணி தலைவர்கள் மத்தியில் எழுந்தது. இது வலுப்பெற்ற நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் தமிமுன் அன்சாரி மற்றும் கருணாசின் எம்எல்ஏ பதவியை பறிப்பது என்று முடிவு செய்தனர்.


ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை, இருக்கும் இடம் தெரியாமல் இருந்த தமிமுன் அன்சாரி, கருணாஸ் போன்றவர்கள் இப்போது அதிமுகவிற்கும், அதிமுக அரசுக்கும் எதிராக செயல்படுவதும், போராட்டங்களை நடத்துவதும், திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த அதிரடி முடிவில் அவர்கள் இறங்கினர்.


இதனால் அதிர்ச்சியடைந்த தமிமும் அன்சாரியும், கருணாசும்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஓடோடிச் சென்று, அவரிடம் மன்னிப்பு கேட்டனர். “இனிமேல் அதிமுக விற்கும், அதிமுக அரசுக்கும் எதிராக செயல்பட மாட்டோம். ஆகவே எங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்” என்று மன்றாடியுள்ளனர்.


பின்னர் வெளியே வந்த தமிமுன் அன்சாரியும் கருணாசும் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டாமென்று முதல்வரை நாங்கள் வலியுறுத்தினோம்” என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தனர்.


“இதுவரை எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் கிள்ளுக்கீரைகளாக நினைத்து வந்த தமிமுன் அன்சாரி, கருணாஸ் போன்றவர்கள் இப்போதுதான் அவர்களின் நிஜ முகத்தை பார்க்க தொடங்கி உள்ளனர்” என்கின்றனர் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள்.



Similar News