புதிய நாடாளுமன்றத்தில் இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட நுழைவு வாயில்களா?

புதுடெல்லியில் அமைந்துள்ள புதிய நாடாளுமன்றத்தில் உள்ள ஆறு நுழைவு வாயில்களும் தனிச்சிறப்புகள் பெற்றுள்ளன. மேலும் ஜனாதிபதி பிரதமருக்கு தனித்தனி நுழைவு வாயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-09-23 05:30 GMT

நாடாளுமன்ற செயல்பாடுகள் பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு  மாறியது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டிருக்கிறது. நான்கு தளங்களுடன் முக்கோண வடிவில் உள்ளது . முதல் நாளன்று பார்வையாளர்கள் ஏராளமான அளவில் குவிந்தனர். நாடாளுமன்றத்தின் உட்புற வடிவமைப்பு பிரமிப்பாக இருந்தது. கட்டிடத்துக்குள்ளே நுழைந்து சுற்றி பார்த்துவிட்டு அதே வாயிலில் வெளியே வரவேண்டும் என்றால் நன்கு பழக்கமானால்தான் அது சாத்தியமாகும்.


அந்த அளவுக்கு கட்டிட வடிவமைப்பு இருக்கிறது. இந்த புதிய கட்டிடத்தில் யானை வாயில், குதிரை வாயில், கருட வாயில், மகர வாயில், ஷர்துலா வாயில் அன்ன வாயில் என ஆறு நுழைவு வாயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. யானை வாயில் வடக்கு திசை பார்த்து இருக்கிறது. இது புத்தி, நினைவாற்றல் ,செல்வத்தை பிரதிபலிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நுழைவு வாயிலின் முகப்பில் இரு பக்கமும் யானை சிலை வைக்கப்பட்டுள்ளது.


கர்நாடக மாநிலம் பனவாசி மதுகேஸ்வரா கோவில் சிலையின் வடிவத்தில் இது செய்யப்பட்டுள்ளது. குதிரை வாயில், தெற்கு திசையில் உள்ளது. இது வலிமை மற்றும் தைரியத்தை பறைசாற்றுவதாகவும் ஒடிசாவின் சூரியனார் கோவில் சிற்பத்தை போல இந்த நுழைவு வாயில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருட வாயில் கிழக்கு திசையில் உள்ளது. கருடன் என்பது தர்மத்தின் சின்னமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்ததாக மகரவாயில் என்பது பல்வேறு உயிரினங்களின் கலவையான ஒரு சிலை அமைப்பு கொண்ட வாயிலாகும். இது கர்நாடக மாநிலம் கோவில் சிற்பத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஷர்துலா வாயில் என்பது சிங்க உடலும் வேறு ஒரு மிருகத்தின் தலையும் கொண்ட சிலையுடன் கூடிய வாசல் ஆகும்.இது நாட்டு மக்களின் சக்தியை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாலியரின் குஜரிம காலை இது நினைவுபடுத்துகிறது. கடைசியாக அன்ன வாயில் என்பது ஹம்பியில் உள்ள விஜய் வித்தலா கோவிலை நினைவூட்டும் விதமாக இரண்டு அன்னங்களின் சிலையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆறு நுழைவு வாயில்களில் பிரதமர், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோருக்கு தனித்தனி நுழைவு வாயில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் யானை வாயில் குதிரை வாயில் மற்றும் கருட வாயில் ஆகியவை பிரதமர், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரின் நுழைவுக்காக பயன்படுத்தப்படும் என தெரிகிறது . மற்ற நுழைவு வாயில்கள் அதிகாரிகள், ஊழியர்கள், பார்வையாளர்கள் மற்றும் நிருபர்களுக்காக ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.


SOURCE :DAILY THANTHI

Similar News