சோழர் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு-மாணவிக்கு குவியும் பாராட்டுகள்!
தொல்லியல் துறை மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சேலம் அருகே சோழர் காலத்து கல்வெட்டை கண்டெடுத்துள்ளதால்
தொல்லியல் துறை மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சேலம் அருகே உள்ள காடையாம்பட்டியில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டை தமிழ் பல்கலைக்கழக முதுகலை பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் படித்து வரும் மாணவி இந்துஷா என்பவர் கண்டுபிடித்து உள்ளதால் அவருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார். சோழ அரசர் இரண்டாம் ராஜாதிராஜனுடைய பத்தாம் ஆட்சியாண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டு ஓமலூர் வட்டத்திலுள்ள காடையாம்பட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டில் காடையாம்பட்டியின் பழைய பெயரான பொன்னார்கூடல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 80 சென்டி மீட்டர் உயரமும் 30 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட இந்த இந்த கல்வெட்டில் இரு புறமும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஏரி ஒன்றை தர்மமாக வெட்டியதை குறிப்பிடும் இந்த கல்வெட்டு ஏரிக்கு கீழ்ப்பகுதியில் இருந்த மகாதேவர் கோவிலுக்கு நிலம் கொடையாக அளிக்கப்பட்டுள்ள விவரங்களையும் சுட்டிக்காட்டுகிறது.
"நிகரிலிச் சோழ மண்டலத்து கங்கனாட்டு தகட நாடான பொந்னார் கூடலிலிருக்கும் திருவரங்கமுடையான் மகந் சொக்கனாந கற்கடராயப் பல்லவரையன்" என்று ஏரியை வெட்டியவர் குறித்த விவரம் இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
செங்கல் சூளையில் கேட்பாரற்ற நிலையில் கிடந்து தொல்லியல் மாணவியால் கண்டெடுக்கப்பட்ட இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்வெட்டை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர். மேலும் இந்த கல்வெட்டை கண்டெடுத்த மாணவிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
Source: த்விட்டேர்