எங்கள் கூட்டணிக்கு பிரச்சார பீரங்கியாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருப்பார். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கிண்டல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு பிரச்சார பீரங்கியாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருப்பார் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கிண்டலாக தெரிவித்தார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றிக்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாடுபடுவோம். அடுத்த கர்நாடகாவில் தேர்தல் வருகிறது.
அங்கு எனக்கு தேர்தல் குழு பணி கட்சி சார்பில் போடப்பட்டுள்ளது. இருந்தாலும் ஈரோட்டில் அதிக நேரத்தை செலவிடுவதாக எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனிடம் தெரிவித்திருக்கிறேன். அந்த வகையில் ஈரோடுக்கு தான் முன்னுரிமை அளிப்பேன். இலங்கை பயணத்தை முடித்த பிறகு களத்தில் இறங்குவேன். நிச்சயமாக பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவின்போது பார்ப்பீர்கள். அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி வேட்பாளராக வருவார். அதில் எங்களுக்கு கடுகளவு கூட சந்தேகமில்லை. கூட்டணி தர்மத்தின் படி கட்சி வேட்பாளரை களம் இறக்கியுள்ளோம்.அவரை வெற்றி பெறச் செய்ய வைப்பது தார்மீக கடமை. அதனை பா.ஜ.க நிச்சயம் செய்யும்.
ஈரோடு கிழக்க சட்டமன்ற தொகுதியில் தான் தி.மு.கவினர் அனைவரும் உட்கார்ந்து இருக்கிறார்கள் முதலமைச்சர் இரண்டு நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் .ஆளும் கட்சி பயந்து ஒரு இடைத்தேர்தலை தமிழக வரலாற்றில் இதுபோல் சந்தித்தது கிடையாது. இதன் மூலம் தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் பயம் வந்துவிட்டது என்று தெரிகிறது. ஈரோட்டில் தி.மு.க கூட்டணி சார்பில் நிற்கும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாயைத்திறந்தால் போதும். நமக்கு ஓட்டு அதிகரித்துக் கொண்டே வரும் . அந்த வகையில் எங்கள் கூட்டணிக்கு பிரச்சார பீரங்கி அவர்தான். இளையராஜாவை திட்டிவிட்டார் . தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை திட்டிவிட்டார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை திட்டிவிட்டார் .அவரால் சும்மா இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.