சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளுக்குப் பின் முதலாம் ராஜேந்திர சோழனின் அரண்மனையில் அகழ்வாராய்ச்சி!

சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளுக்குப் பின் முதலாம் ராஜேந்திர சோழனின் அரண்மனையில் அகழ்வாராய்ச்சி!

Update: 2021-01-23 14:54 GMT

தமிழ்நாடு தொல்லியல்துறை அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் அருகே கள ஆய்வைத் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் இணைந்தும் ட்ரோன் உதவியுடன் சோழ வம்சத்தின் தொல்பொருள் எச்சங்களை, குறிப்பாக பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழரின் காலத்தில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்கள் குறித்து கண்டறிவதற்கான ஆய்வினை இந்த குழு மேற்கொள்ளும்.

கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள 18 சதுர கிலோமீட்டர் வரை உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. வெப்ப பகுப்பாய்வு மற்றும் நிலத்தடி நீரோடைகள் குறித்த ஆய்வு ஆகிய ஆய்வுகளுக்குப் பின் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட இருக்கும் பரப்பைக் கண்டறிய தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வின் முதல் கட்டமாக முதல் கட்டமாக கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பொன்னேரி, மாளிகைமேடு உள்ளிட்ட பகுதிகள் ட்ரோன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் 1980, 81, 85, 87, 91 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் மேலோட்டமாக அகழ்வாய்வு செய்யப்பட்டபோது ராஜேந்திர சோழனின் அரண்மனை இருந்ததாக கருதப்படும் மாளிகைமேடு பகுதியில் இரும்பு ஆணிகள் கூரை ஓடுகள் யானை தந்தங்கள் மற்றும் தங்களால் ஆன கலைப் பொருட்கள் மண்பாண்ட ஓடுகள் மற்றும் சீன நாட்டு பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலாம் ராஜேந்திர சோழன் சோழ ராஜ்ஜியத்தின் தலைநகரை தஞ்சாவூரிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றியதால், இந்த ஆய்வின் மூலம் பல நூற்றாண்டுகள் பழமையான சோழர் கால எச்சங்கள் மற்றும் நீர் மேலாண்மை நடைமுறையின் ஆவணங்கள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக தெரியவருகிறது.

இந்த அகழ்வாராய்ச்சிக்கான இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏ.எஸ்.ஐ) ஒப்புதல் கடந்த மாதம் பெறப்பட்டது. கீழடி மற்றும் ஆதிச்சநல்லூருக்குப் பிறகு கங்கைகொண்ட சோழபுரத்தில்  மேற்கொள்ளப்பட உள்ள இந்த ஆய்வு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அகழ்வாராய்ச்சிகளில் ஒன்றாக இருக்கும் என்று மாநில தொல்பொருள் துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம் தனியார் பத்திரிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா

Similar News