ஐராவதம் சாப விமோசனம் பெற்ற அதிசய ஸ்தலம் - பிரம்க்க வைக்கும் சிற்ப கலை.!

ஐராவதம் சாப விமோசனம் பெற்ற அதிசய ஸ்தலம் - பிரம்க்க வைக்கும் சிற்ப கலை.!

Update: 2020-07-06 02:45 GMT

சிற்பங்களுக்கு பெயர் பெற்ற ஐராவததேஸ்வரர் கோயில் .

இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட ஐராவதேஷ்வரர் கோயில் தஞ்சை கோயிலுக்கு நிகரான கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது மேலும் தமிழகத்தில் வேறு எந்த கோயிலிலும் இல்லாத அளவிற்கு சிற்பங்கள் அதி அற்புதமாக இந்த கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது . கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோயில் ஆகியவற்றோடு சேர்த்து இந்த ஐராவதேஸ்வரர் கோயிலும் சோழர்களின் அற்புதமான சிற்ப கலைக்கு சான்றாக விளங்குகிறது.

ஐராவதம் என்பது இந்திரனின் யானை. சிவனின் சாபத்தால் தன் தேஜசை இழந்த யானை இந்த தலத்திற்கு வந்து சாப விமோசனம் பெற்றதால் இக்கோயில் இந்த பெயர் பெற்றது . இரண்டாம் ராஜராஜனால் தாராசுரம் என்ற இடத்தில் 12 ஆம் நூற்றாண்டில் கட்ட பட்ட கோயில் இது. இக்கோயில் முழுவதுமே சிற்பக் கலையின் உச்சத்தை பறைசாற்றுவது போல் சுவர்கள் மண்டபங்கள் தூண்கள் என எல்லா இடங்களிலும் மிக மிக நுண்ணிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன . தேர் வடிவம் போன்ற மண்டபங்களும் நேர்த்தியாக வடிவமைக் கப்பட்டட்டுள்ளன. இந்த கோயில் சிற்பிகளின் கனவு என்று கட்டிட வல்லுனர்களால் வர்ணிக்க படுகிறது .

வடநாட்டு கொனார்க் கோயில் பாணியில் ஒரு தேரை குதிரைகள் இழுத்து செல்வது போல் கட்டிட அமைப்பை செய்துள்ளனர். மேலும் ராஜ கம்பீரம் என அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனும் யானையாலும் குதிரைகளாலும் இழுத்து செல்லப்படுவது போல் அமைந்துள்ளது . இத்தேரின் சக்கரம் இந்திய சிற்ப கலைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாகும். இந்த ராஜகம்பீர மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் ஆச்சர்யமானவை. இங்கு நாட்டியமாடும் பெண்கள் இசை கலைஞர்கள் மற்றும் புராண கதை சிற்பங்கள் வெறும் சென்டி மீட்டர் அளவே உள்ளன. இங்குள்ள ஒரு அழகான நர்த்தன கணபதி சிற்பம் உள்ளங்கை அளவே உள்ளது.

மேலும் எந்த சிவன் கோயிவிலிலும் காணப்படாத அதிசயமாக கருவறைக்குள்ளேயே லிங்கத்தின் இருபுறமும் துவார பாலகர்கள் காட்சி தருகிறார்கள் . இக்கோயிலில் அமைந்துள்ள குளம் எமதர்மனுக்கே சாப விமோசனம் அளித்திருக்கிறது . இங்குள்ள மண்டபத்தில் வரிசையாக நாயன்மார்கள் சிலை உள்ளது அதில் கண்ணப்ப நாயனாரின் சிலை காலில் மெல்லிய செருப்பு அணிந்துள்ளது போல் அற்புதமாக செதுக்கப் பட்டுள்ளது. நந்தியின் அருகில் உள்ள படிகள் வித விதமான இசை சப்த்தங்களை எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளன மேலும் இந்தியாவில் எந்த கோயிலிலும் இல்லாத புல்லாங்குழல் ஊதும் சிவன் இங்கு சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறார். இன்னும் இது போன்று ஏராளமான புதுமைகளை இங்கு காண முடியும் . 2004 ஆண்டு இந்த கோயில் உலக பாரம்பர்ய சின்னமாக அறிவிக்கபட்டுள்ளது குறிப்பிட தக்கது.

Similar News