கேளிக்கை விளையாட்டு அரங்கில் தீ விபத்து: குஜராத்தில் பயங்கரம், 24 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்!

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் மிகப்பெரிய கேளிக்கை விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. அங்கு பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டு பலி.

Update: 2024-05-26 10:59 GMT

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விளையாட்டு அரங்கில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்குமான விளையாட்டுகள், பொழுதுபோக்கு தளங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த நிலையில் கோடை விடுமுறை காரணமாக பெண்கள் உட்பட ஏராளமானோர் நேற்று இந்த விளையாட்டு அரங்கில் அவர்கள் தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடும் உணவு விடுதிகளுக்கு சென்று உணவுகளை ருசித்தும் மகிழ்ச்சியாக பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது சற்றும் எதிர்பாராத வகையில் விளையாட்டு அரங்கில் திடீரென தீப்பிடித்தது. சற்று நேரத்தில் விளையாட்டு அரங்கம் முழுவதும் பரவியது. இதில் தீப்பிழம்புகளுடன் வானுயிரத்துக்கு கரும்புகை மண்டலம் எழுந்தது. தீப்பிழம்பைத் தொடர்ந்து விளையாட்டு அரங்கத்துக்குள் இருந்த சிறுவர்கள் ,பெண்கள் உட்பட அனைவரும் அலறி அடித்துக்கொண்டு அங்கும் இங்குமாக ஓட்டம் எடுத்தனர். ஒரு சிலர் விளையாட்டு அரங்கத்தை விட்டு விரைவாக வெளியேறி உயிர்த்தப்பினர். அதே சமயம் தீப்பிடித்த சற்று நேரத்தில் விளையாட்டு அரங்கில் நாலாபுரமும் தீ சூழ்ந்ததால் பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விளையாட்டு அரங்கத்திற்கு சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர் .ஆனால் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிந்ததால் அவர்களால் விளையாட்டு அரங்கத்தை நெருங்க முடியவில்லை. இதனிடையே தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயனைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள்  தண்ணீரை பீச்சு அடித்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதைத்தொடர்ந்து விளையாட்டு அரங்கத்துக்குள் இருந்த சிறுவர்கள் உட்பட 24  உடல்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்கள் அடையாளம் காண முடியாத படி கரிக்கட்டைகளாக இருந்தன .சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

குஜராத் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்து என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனைகள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய உள்ளாட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.


SOURCE :Dinamani



Similar News