முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி மு.ராஜேந்திரனின் 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

முன்னால் ஐ.ஏ.எஸ் அதிகாரி மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி'என்கின்ற நாவல் சாகித்ய அகாடமிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-23 05:45 GMT

நாவல், நாடகம், சிறுகதை, விமர்சனம், காவிய கதை போன்ற இலக்கிய படைப்புகளுக்கு நாட்டில் வழங்கப்படும் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி விருது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான சாகித்ய அகாடமி நிறுவனம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், குஜராத்தி, உள்ளிட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கிறது. அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பெங்காலி மொழி தவிர 23 மொழிகளுக்கு நேற்று அறிவிக்கப்பட்டன. சாகித்யா அகாடமி தலைவர் சந்திரசேகர் கம்பர் தலைமையிலான குழு இதனை அறிவித்தது.


இதில் ஏழு கவிதை நூல்கள், 6 நாவல்கள், இரண்டு சிறுகதைகள், மூன்று நாடகங்கள், இரண்டு இலக்கிய விமர்சனங்கள், தலா ஒரு சுயசரிதை கட்டுரைகளின் தொகுப்பு மற்றும் இலக்கிய வரலாறு ஆகியவை விருது பெற்றுள்ளன. தமிழில் 'காலாபாணி' என்ற நாவல் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நாவலை மதுரை மாவட்டம் வடகரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மு. ராஜேந்திரன் எழுதியுள்ளார். இதனை சிறந்த நாவலாக ஜி.திலகவதி கலாப்ரியா, ஆர்.வெங்கடேஷ் ஆகியவை கொண்ட நடுவர் குழு தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை தொடங்கி வைத்தது தென் தமிழகம். ஆங்கிலேயர்கள் தங்களுடன் மோதுபவர்களுக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்க போராளிகளை தூக்கிலிட்டார்கள். 1802 ஆம் ஆண்டு போராளிகளை முதன்முறையாக நாடு கடத்தினார்கள். நாடு கடத்துவதை 'காலா பாணி, என்று அழைத்தார்கள் ஆங்கிலேயர்கள்.


தென் தமிழகத்திலிருந்து சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவரும் போராளிகள் 71 பேரும் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார்கள். 73 நாட்கள் நீடித்த கடுமையான கடல் பயணத்திற்கு பிறகு அரசியல் கைதிகள் பினாங்கில் சிறை வைக்கப்பட்டனர். பெரிய உடையணத் தேவரை மட்டும் பினாங்கில் இருந்து சுமத்ரா தீவிற்கு மாற்றினார்கள். அங்கு மால்பரோ கோட்டையில் சிறை வைக்கப்பட்ட அரசர் நான்கு மாதங்களில் இறந்து போகிறார். தூத்துக்குடியில் இருந்து போராளிகள் கப்பலில் அழைத்துச் செல்வதில் தொடங்கி மால்பரோ கோட்டையின் சிறையில் சிவகங்கை அரசர் உயிர் விடுவது வரையிலான சம்பவங்களை துயர காவியமாக எழுதியுள்ளார் மு. ராஜேந்திரன். கப்பல் பயணமும் போராளிகளின் துயரமும் படிப்பவரை கண்ணீர் விட வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. காலாபாணி நாவலை எழுதுவதற்கு மு.ராஜேந்திரன் பினாங்கு தீவுக்கும் சுமத்திரா தீவுக்கும் பயணம் சென்று வந்திருக்கிறார். ஆவண காப்பகங்களில் இருந்து நாவலுக்கான ஆதாரங்களை திரட்டி இருக்கிறார் .


ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய ஓய்வு பெற்றுள்ள மு.ராஜேந்திரன் மதுரை கோர்ட்டில் மூன்று ஆண்டுகள் வக்கீலாக பணியாற்றியவர். பின்னர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர், தமிழக வேளாண்மை துறை ஆணையர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இது தவிர பல நாவல்களையும் நூல்களையும் எழுதியுள்ளார். இதைப்போல சிறந்த மொழிபெயர்ப்புக்கும் நேற்றுவிருது அறிவிக்கப்பட்டது. தமிழ் உட்பட 17 மொழிகளுக்கு விருது அறிவித்தனர். தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது 'யாத்வாஷெம்'என்ற நாவலுக்காக நல்ல தம்பிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருதுகள் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சாகித்ய அகாடமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Similar News