பழங்குடியின இளைஞர்களின் திறனை மேம்படுத்த அரசு நடவடிக்கை - பிரதமர் மோடி!
பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய அரங்கத்தில் தேசிய பழங்குடியினர் திருவிழாவான ஆடி மகோத்சவசத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அவர் கூறியதாவது :-
முதன்முறையாக பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு நாட்டின் உயர்மட்ட அரசியல் அமைப்பு பதவியை வகித்திருக்கிறார். பழங்குடியினர் நலன் என்பது எனக்கு தனிப்பட்ட உறவுகள் மற்றும் உணர்ச்சிகளின் விஷயமாகும். பழங்குடியினரின் வாழ்க்கை எனக்கு நாடு மற்றும் அதன் பாரம்பரியங்களை பற்றி நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. ஏனெனில் எனது வாழ்க்கையின் முக்கியமான ஆண்டுகளை அம்பாஜி முதல் உமர்காம் வரையிலான பழங்குடி பகுதியில் கழித்தேன். பழங்குடியின குழந்தைகள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் கல்வியும் எதிர்காலமும் இந்த பா.ஜனதா அரசுக்கு மிகவும் முக்கியம். நாட்டில் புதிய பழங்குடியின ஆய்வு நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் பழங்குடியின இளைஞர்களுக்கு அவர்களின் சொந்த பகுதியில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.
பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடதுசாரி பிரிவினைவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கிராமங்கள் தற்போது 4ஜி இணைய வசதிகளை பெற்றுள்ளன. இங்குள்ள இளைஞர்கள் தற்போது இணையம் மற்றும் உள் கட்டமைப்பு மூலம் தேசிய நீரோட்டத்துடன் இணைந்துள்ளனர். அரசு தற்போது டெல்லியில் இருந்து தொலைதூரத்தில் இருப்பவர்களிடம் சென்று அவர்களை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வருகிறது. இவ்வாறு பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது இன்று 80 லட்சத்திற்கும் அதிகமான சுய உதவி குழுக்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ளன இதில் 1.25 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் நமது பழங்குடி சகோதர சகோதரிகள் ஆவர்.
அவர்களின் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நமது தாய் மற்றும் சகோதரிகள் மொழி தடைகள் காரணமாக நமது பழங்குடியின இளைஞர்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வந்தனர். ஆனால் தற்போது தாய் மொழியிலேயே கற்கும் வசதியை புதிய தேசிய கல்வி கொள்கை வழங்கி இருக்கிறது .இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள விஸ்வவகர்ம கவுஷல் சம்மான் யோஜனா திட்டம் மூலம் பழங்குடியின மக்களுக்கு நிதி உதவி திறன் பயிற்சி மற்றும் சந்தைப்படுத்துவதற்கான உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். தேசிய பழங்குடியினர் திருவிழா வருகிற 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பழங்குடியினர் கலாச்சாரம், கைவினைப் பொருள்கள், உணவு வகைகள், பொருளாதாரம் மற்றும் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அங்கு திறக்கப்பட்டு இருக்கின்றன.