குஜராத் பெண் எம்.எல்.ஏ ராஜினாமா! காங்கிரஸ் கட்சிக்குள் வெடிக்கும் பிரிவினைவாதம்?

குஜராத் பெண் எம்.எல்.ஏ ராஜினாமா! காங்கிரஸ் கட்சிக்குள் வெடிக்கும் பிரிவினைவாதம்?

Update: 2019-02-05 10:37 GMT

குஜராத் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க 99 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. 77 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ ஒருவர் ராஜினாமா செய்துள்ளது அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.


குஜராத் மாநிலம் மேஹ்சனா மாவட்டம் உஞ்சா தொகுதியயின் எம்.எல்.ஏ-வான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆஷா பட்டேல் கட்சியிலிருந்தும், எம்.எல்.ஏ பதவியிலிருந்தும் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், கட்சிக்குள் சாதிரீதியான பாகுபாடுகள் அதிகரித்து வருவதாகவும், மாநில நிர்வாகிகள் தனக்கு மதிப்பளிப்பது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பக்கம் பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளார், அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி இங்கு சாதிகளுக்கு இடையில் பிரிவினை ஏற்படுத்த முயல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரிவினைவாதம் மற்றும் பிளவுபடுத்தும் அரசியலில் தான் காங்கிரஸ் கட்சி ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 


காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்ததையடுத்து பா.ஜ.க-வில் ஆஷா பட்டேல் இணைவாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தனது தொகுதி மக்களிடம் கலந்துரையாடி முடிவை அறிவிப்பதாக கூறினார். கடந்த ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ. குன்வர்ஜி பவாலியா என்பவர் கருத்து வேற்றுமை காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார். இந்த இரண்டு எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை 75-ஆக சரிந்துள்ளது. பா.ஜ.க 100 எம்.எல்.ஏ-க்களை கொண்டுள்ளது.



Similar News