உணவு பொட்டலங்களை வீசி எறிந்த சகோதரருக்கு சப்பை கட்டு கட்டும் கர்நாடக முதல்வர்

உணவு பொட்டலங்களை வீசி எறிந்த சகோதரருக்கு சப்பை கட்டு கட்டும் கர்நாடக முதல்வர்

Update: 2018-08-22 05:42 GMT

கர்நாடக மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஹெச்.டி. ரேவண்ணா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசி எறிந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்காளில் வைராலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் சகோதரரான ரேவண்ணா அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்றார். அப்போது அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் பொட்டலங்களை வீசி எறிந்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் வேறுவழியின்றி அதனை பிடித்துக் கொண்டனர். மக்கள் கையில் பிஸ்கட்களை கொடுக்கும் வகையில் மிக அருகிலேயே நின்று கொண்டிருந்த அந்த அமைச்சர், அவ்வாறு தூக்கி எறிந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, உணவுப் பொட்டலங்களை பெற ஏராளமான மக்கள் காத்திருந்ததாலும் அங்கு நகர்ந்து செல்ல இடமின்றி நெரிசலாக இருந்ததாலும் தனது சகோதரர் உணவுப் பொட்டலங்களை வீசி எறிய நேர்ந்ததாக தெரிவித்துள்ளார். ஊரே பார்த்து கைகொட்டி சிரித்த பின்னர், உத்தமன் போல சாக்குபோக்கு சொல்லியது சமூக ஆர்வலர்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News